மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி கடற்கரைப் பகுதியில், செங்கலடியைச் சேர்ந்த 34 வயதுடைய ஆண் ஒருவர் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவ இடத்தில் அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
உயிரிழந்தவர் ‘லக்கி’ என அழைக்கப்படும், செங்கலடி கணேச கிராமத்தைச் சேர்ந்தவர்.
அவர் ஏறாவூரில் உள்ள உறவினரின் தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
நேற்று (10-08) மாலை வீட்டை விட்டு வெளியேறிய அவர், இரவு வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடத் தொடங்கினர்.
அடுத்த நாள் காலை, சவுக்கடி கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதாக பொது மக்கள் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, கொக்குவில் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தடவியல் பிரிவு பொலிஸாரும் கலந்து கொண்டு ஆதாரங்களை சேகரித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற அனுமதி பெறும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
