யாழ்ப்பாணம்–கண்டி ஏ9 வீதியில், கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு (10-08) இடம்பெற்ற பல வாகன மோதல் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஒருவர் அமர்ந்திருந்தபோது, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை மோதியது.
உயிரிழந்தவர் மிருசுவில் கரம்பஹம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளைத் தவிர்க்க டிப்பர் வாகன சாரதி பிரேக் போட்டபோது, அதே திசையில் வந்த கூலர் லொரி டிப்பர் பின்புறத்தில் மோதி, அதன் தாக்கத்தில் டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதியது.
பின்னர் கூலர் லொரி எதிரே வந்த காருடன் மோதியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கடுமையாக காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
மேலும், டிப்பர் வாகன சாரதி, கூலர் லொரி சாரதி, கார் ஓட்டுநர் மற்றும் அவரது மகன் உட்பட பலர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


