இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கு முதலீட்டு சபையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு, ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களத்தின் முன்னாள் அத்தியட்சகர் வைத்தியர் தம்மிக்க அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அவரின் விளக்கத்தில், முதலீட்டு சபையின் திட்டத்தின் படி இந்த அனுமதி வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மொத்தம் 37 பேர் விண்ணப்பித்த நிலையில், ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
முதலீட்டாளர்கள் 2 மில்லியன் அமெரிக்க டொலர் வைப்பு தொகை செலுத்த வேண்டும். பயிரிடப்படும் நிலம் முழுவதும் பாதுகாப்பு வேலியால் சூழப்பட்டு, அதிக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். வெளிநாட்டவர்களுக்கு அல்லது வெளியாருக்கு பயிரிடும் பகுதியை பார்வையிடும் வாய்ப்பே இருக்கக் கூடாது. இதற்காக முதலீட்டு சபைக்கு சொந்தமான மீரிகமவில் உள்ள 64 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், பயிரிடப்படும் கஞ்சாவிலிருந்து எண்ணெய் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். அத்துடன், மருத்துவப் பயன்பாட்டிற்கும் ஏற்றுமதி மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியில், சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த டயனா கமகேவும் கஞ்சா பயிரிடும் திட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுத்தபோது அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..

