வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவித்து, அக்காணிகளில் மக்கள் சுதந்திரமாக விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் காணி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.
அவர்கள் குறிப்பிட்டதாவது, யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்தும், பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி இராணுவத்தினர் தனியார் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ளனர்.
இக்காணிகளில் இராணுவத்தினரே விவசாயம் செய்து வருகின்றனர்.
இதனால் காணி உரிமையாளர்கள் விவசாயம் செய்ய முடியாமல் வறுமையில் வாடுகின்றனர்.
தனியார் காணிகளை அடாத்தாக பிடித்து விவசாயம் செய்வது சட்டவிரோதமானது. மேலும், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் இராணுவத்தினர் எவ்வாறு விவசாயம், தோட்டம், வணிகங்கள் செய்து வருமானம் பெறுகின்றனர்?
அந்த வருமானம் எங்கு செல்கிறது? திறைசேரிக்கு அனுப்பப்படுகிறதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
எனவே, யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்தும் பாதுகாப்பு காரணம் எனக் கூறி தனியார் காணிகளை பயன்படுத்தி வருமானம் ஈட்டியுள்ள நிலையில், காணி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்.
அதேசமயம், அவர்களின் காணிகளை உடனடியாக விடுவித்து, அவர்கள் மீண்டும் விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.
மேலும், பலாலி வீதி தற்போது பகுதியளவு திறக்கப்பட்டிருந்தாலும், இரவு 7.00 மணி முதல் காலை 6.00 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடந்து செல்லவோ, இருசக்கர வாகனங்களில் பயணிக்கவோ முடியாத கட்டுப்பாடுகள் இன்னும் தொடர்கின்றன.
இக்கட்டுப்பாடுகளை நீக்கி, மக்கள் சுதந்திரமாகப் போக்குவரத்து செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

