பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கதிர்காமத்தில் ஊடகங்களிடம் பேசிய அவர், முதற்கட்டமாக 40 தொழில்நுட்ப கருவிகளை அரச மற்றும் தனியார் பேருந்துகளில் நிறுவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறினார்.
இந்த AI தொழில்நுட்பம் மூலம், சாரதிகள் சோர்வாக இருந்தாலும், தூக்கத்தில் இருந்தாலும், நித்திரைக் கலக்கம் ஏற்பட்டாலும், அல்லது பணிநேரத்தில் செய்யக் கூடாத பிற செயல்களில் ஈடுபட்டாலும், உடனடியாக அவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்படும்.
இத்தகைய அம்சங்கள் பல ஆண்டுகளாக இலங்கையில் உள்ள சில நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், பொதுப் போக்குவரத்திற்காக, குறிப்பாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளில் இதுவரை பயன்படுத்தப்படவில்லை.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடிய பின்னர், அவர்கள் தங்களது நிர்வாக அறிவு, தொழில்நுட்பம் மற்றும் தேவையான உபகரணங்களை வழங்க முன்வந்துள்ளனர். இதன்படி, முதற்கட்டமாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கு 40 கருவிகள் வழங்கப்படும்.

