ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க், இலங்கையின் கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்கள் தொடர்பான அரசாங்கத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினர் குறித்த பொறுப்பை நீண்டகாலமாக ஏற்க மறுத்துள்ளதை கண்டித்து, ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வதை வலியுறுத்தியுள்ளார்.
அதன் மூலம், இராணுவத்தினால் பிடிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல், புதிய நிலக் கையகப்படுத்துதல்களை நிறுத்தல், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை விடுவித்தல், பாதிக்கப்பட்டவர்களின் நினைவு முயற்சிகளை ஆதரித்தல், காணாமல் போனவர்கள் அலுவலகத்தின் பாரபட்சமற்ற தன்மையை உறுதி செய்தல் ஆகியவற்றை செயல்படுத்தி நிலைமாற்றுக்கால நீதிக்கான சூழலை உருவாக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச ஈடுபாடு இன்றியமையாதது என்றும், இது பொறுப்புக்கூறல், நீண்டகால நல்லிணக்கம் மற்றும் நிலையான அமைதிக்கு உறுதுணையாக இருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடுப்பதும், பொறுப்புக்கூறலை உறுதி செய்வதும் முதன்மை பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடம் இருப்பினும், சர்வதேச வழிமுறைகளால் இதனை ஆதரிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இலங்கை அரசாங்கம், மாற்றத்திற்கான அடித்தளங்களை நடைமுறைப்படுத்தி, கடந்தகால மோதல்களின் அடிப்படை காரணங்களுக்கு தீர்வு கண்டு, நிலையான சமாதானம் மற்றும் தேசிய ஐக்கியத்திற்கு அடித்தளத்தை அமைக்க இத்தருணத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவ்வாறு நடவடிக்கை எடுத்தால், கடந்தகால மீறல்கள் மீண்டும் நிகழாததை உறுதி செய்யும், அரச நிறுவனங்களின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வடக்குக் கிழக்கில் இராணுவத்தின் பிடியில் உள்ள நிலங்களை விடுவிக்க, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க, நீண்டகால கைதிகளை விடுதலை செய்யும் நடவடிக்கைகள் அவசியம் எனவும், சுயாதீன வழக்குரைஞர் அலுவலகத்தை அமைத்து நீதி வழங்கும் அர்ப்பணிப்புள்ள நீதித்துறை பொறிமுறையை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச சமூகம், இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கு அர்த்தபூர்வ பங்களிப்பு வழங்க வேண்டும் என்றும், மனித உரிமை ஆணையாளர் அறிக்கையில் கூறியுள்ளார்.

