(நூருல் ஹதா உமர்)
காரைதீவு பிரதேச சபையின் 04ஆம் சபையின் இரண்டாவது அமர்வு இன்று (14-08) சுபாஸ்கரன் தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்றது.
அனைத்து உறுப்பினர்களும் பிரசன்னத்துடன் அமர்வில் கலந்து கொண்டனர்.
தேசிய கீதத்துடன் தொடங்கிய அமர்வில், முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவில் இராணுவ தாக்குதலில் காணாமல் போன நிலையில் முத்துஐயன்கட்டுக் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் கபில்ராஜ்க்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அமர்வில் பிரதேச சபையின் நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தொகையில் 80 மில்லியன் ரூபாய் அரசின் மீள்நிரப்பல் மூலமாக வழங்கப்படுவதாகவும், மீதமுள்ள 20 மில்லியன் ரூபாய் சபை நிதியிலிருந்து வழங்கப்பட்டு வருவதால் மக்களுக்கான அபிவிருத்தி வேலைகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவாதிக்கப்பட்டது.
அதன்படி, அரசின் மீள்நிரப்பல் தொகையை 100 மில்லியன் ரூபாய் வழங்கக் கோரி பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. சபை உறுப்பினர்கள் இதற்கு அனுமதி வழங்கினர்.
மேலும், தொலைபேசி பாவனைக்கான உச்ச தொகை தவிசாளர் 2,500 ரூபாய், உபதவிசாளர் 1,500 ரூபாய், உறுப்பினர்கள் 1,000 ரூபாய் என நிர்ணயம் செய்யவும், பிரதேச சபை வாகனத்தை அலுவலக தேவைகளுக்காக பயன்படுத்தும் போது மாதாந்திர எரிபொருள் அளவை தீர்மானிக்கவும் சபை அனுமதி வழங்கியது.
உபசரணைச் செலவுகள், அலுவலக உபகரணங்கள் கொள்வனவு மற்றும் ஊழியர்களுக்கு இடர் கடனாக 100,000 ரூபாய் வழங்குவது தொடர்பிலும் உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
தொகையை சபை வருமானத்திலிருந்து அதிகரிப்பது குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
மாவடிப்பள்ளி கிராமத்தில் சிறுவர் பூங்கா அமைப்பது தொடர்பாக, காணி கிராம சேவை அதிகாரியால் அடையாளம் காணப்பட்டு, பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அதனை வட்டார கௌரவ உறுப்பினர்களுடன் பார்வையிடும் நடவடிக்கை சபை அனுமதித்தது.
இதற்கு மாவடிப்பள்ளியை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
அமர்வில், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், பிரதேச உறுப்பினருமான கி. ஜெயசிறில் தமிழர்களுக்கு நடைபெற்ற அநியாயங்களை நினைவுபடுத்தி உரையாற்றினார்.
எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள நீதிகோரிய கடையடைப்பு போராட்டத்திற்கு மலையக தலைவர்கள் ஆதரவு வழங்கியது போல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் பிற அரசியல் கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சபையில் முன்வைக்கப்பட்டது.


