தமிழ் மக்களின் தோல்வியுற்ற அரசியல் போராட்டத்திலிருந்து மீண்டு, பொருளாதார முன்னேற்றத்தை மீட்டெடுக்கும் இந்த காலகட்டத்தில், ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றவை என்று சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தார்.
யாழ்ப்பாண ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் பேசியதாவது:
தற்போது அழைக்கப்பட்டுள்ள கடையடைப்பு போராட்டம், ‘கடைந்தெடுத்த கயவர்கள்’ விடுத்த அழைப்பு ஆகும்.
இதை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.
இன்றைய சூழலில் கடையடைப்பு தேவையற்றது; இது காலத்திற்குப் பொருந்தாத போராட்டம்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவப் பிரசன்னம் என்பது தோல்வியுற்ற இனம் எதிர்கொள்ளும் இயல்பான அடக்குமுறை தான்.
மடு மாதாவின் நலனை முன்னிறுத்தி, நல்லூர் திருவிழாவை குறிவைத்து, கடையடைப்பை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தும் சில தரப்பினர், நாளாந்தம் உழைத்து வாழும் மக்களின் வாழ்க்கையை பாதிக்க முயல்கின்றனர்.
ஏழை மக்களை அரசியல் விளையாட்டில் பலியாடாக்கும் இந்த நரித்தன அரசியலுக்கு இடமளிக்கக் கூடாது.
எனவே, இத்தகைய கடையடைப்பு போராட்டங்களுக்கு வர்த்தகர்கள், போக்குவரத்து சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

