மன்னார் மாவட்டத்தில் நடைபெறும் காற்றாலை மற்றும் கனியமணல் திட்டங்களுக்கு எதிராக உறுதியான மற்றும் இறுதியான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, 13ஆவது நாளாகவும் இன்று (15-08) மன்னார் பிரதான சுற்றுவட்டப் பகுதியில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள், பல்வேறு கோசங்களை எழுப்பி, எதிர்ப்புச் செய்திகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அண்மையில் ஜனாதிபதியுடன் நடந்த சந்திப்பில், காற்றாலை திட்டங்களை ஒரு மாத காலம் நிறுத்தி வைப்பதாக அவர் உறுதி அளித்திருந்தாலும், உறுதியான முடிவு வரும் வரை போராட்டத்தை நிறுத்தமாட்டோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, எரிசக்தி அமைச்சர் ஒரு வார காலத்திற்கு திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்திருந்தார்.
எனினும், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல், நள்ளிரவு நேரங்களில் காற்றாலை உதிரிபாகங்கள் மன்னார் நகருக்குள் கொண்டு வரப்பட்டன.
இதனால், ஜனாதிபதியின் வாக்குறுதியிலும் மக்கள் நம்பிக்கை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி, பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி தேர்தல் பிரசாரங்களில் தேசிய மக்கள் சக்தி, காற்றாலை திட்டங்களுக்கு அனுமதி வழங்கமாட்டோம் என்று தெரிவித்திருந்தாலும், அந்த வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், தற்போதைய ஒரு மாத இடைநிறுத்த வாக்குறுதியை எவ்வாறு நம்புவது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


