இலங்கை தமிழரசு கட்சியால் எதிர்வரும் திங்கட்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாதென வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்மானத்தை சங்கத் தலைவர் கே. கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கில் அதிகரித்து வரும் இராணுவப் பிரச்சன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன் கட்டிலில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வடகிழக்கு தழுவிய ஹர்த்தாலை மேற்கொள்ள இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.
இதையடுத்து, வவுனியா மாவட்ட வர்த்தகர் சங்கத்தின் ஆதரவைப் பெறும் நோக்கில், எம். ஏ. சுமந்திரன் இரு நாட்களுக்கு முன்பு சங்க பிரதிநிதிகளை நேரடியாக சந்தித்து, ஹர்த்தாலில் இணையுமாறு கோரினார்.
இந்நிலையில், இன்று கூடிய நிர்வாக சபை கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள், அன்றைய தினம் வியாபார நிலையங்களை வழமையானபடி திறந்து வைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர்.
இதன் விளைவாக, வரும் திங்கட்கிழமை வவுனியாவில் வியாபாரச் செயல்பாடுகள் வழமைபோல் நடைபெறும் என்றும், ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது என்றும் நிர்வாக சபை முடிவு செய்துள்ளது என்று சங்கத் தலைவர் கிருஸ்ணமூர்த்தி உறுதிப்படுத்தினார்.

