காரைதீவு பிரதேச சபையின் ,ரண்டாவது அமர்வு நேற்று (14-08-2025) தவிசாளர் சு. பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்றது.
அமர்வின் தொடக்கத்தில், முல்லைத்தீவு முத்தையன் கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் கபில்ராஜ் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தவிசாளர் பாஸ்கரன், வடகிழக்கில் தமிழர்களுக்கு ஏற்படும் அநீதிகளை கண்டித்து, இராணுவத்தின் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள தமிழரசு கட்சியின் ஹர்த்தாலுக்கு அனைத்து உறுப்பினர்களும், பொதுமக்களும் முழுமையான ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுத்தார்.
காரைதீவின் பொதுமக்கள் சார்பாகவும் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமர்வில், பிரதேச சபை ஊழியர்களின் சம்பள மீள்நிரப்பல் தொகையை 100 வீதமாக உயர்த்துவது, தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கான தொலைபேசி மற்றும் எரிபொருள் ஒதுக்கீடு, உபசரணைச் செலவுகள், மற்றும் ஊழியர்களுக்கு இடர்கடனாக ரூ.100,000 வழங்குவது உள்ளிட்ட பல பிரேரணைகள் அங்கீகரிக்கப்பட்டன.
மேலும், மாவடிப்பள்ளி கிராமத்தில் சிறுவர் பூங்கா அமைக்கும் திட்டமும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
முன்னாள் தவிசாளர் கி. ஜெயசிறில், தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை எனவும், கபில்ராஜ் கொலை சம்பவம் போன்ற அநீதிகளைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக வாழ் தமிழர்கள் அனைவரும் ஹர்த்தாலில் பங்கேற்று ஒற்றுமையைக் காட்ட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

