மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (16-08) 14ஆம் நாளாகவும் சுழற்சி முறையில் தொடர்ந்து நடைபெற்றது.
மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வரும் இப்போராட்டத்திற்கு ஆதரவாக, வங்காலை மற்றும் தலைமன்னார் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தலையில் கருப்பு பட்டி அணிந்து, பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்ற பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இன்று காலை தொடங்கிய இந்தப் போராட்டம் மன்னார் நகரின் சுற்றுவட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
புதிய காற்றாலை மின் கோபுர அமைப்பும், கனிம மணல் அகழ்வும் முழுமையாக நிறுத்தப்படும் வரை போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதாக போராட்டக்காரர்கள் உறுதியளித்தனர்.


