ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை ஒன்றை பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் சமர்ப்பிக்கவுள்ளன.
இதில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பித்தல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல், மேலும் 13ஆவது திருத்தத்தின்படி மாகாணசபைத் தேர்தல்களை காலந்தாழ்த்தாமல் விரைந்து நடத்துதல் உள்ளிட்ட விடயங்கள் உள்வாங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்பே அளித்த வாக்குறுதிகளுக்கிணங்க, அரசியலமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்றும், பயங்கரவாதத்தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும், மாகாணசபைத் தேர்தல்கள் இடைநீக்கம் இன்றி நடத்தப்பட வேண்டும் என்றும் பிரேரணையில் வலியுறுத்தப்படும் என கூறப்படுகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகி, ஒக்டோபர் 8ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு’ என்ற தீர்மானத்தின் அடிப்படையில், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்னெடுத்து வரும் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை தொடர்பான விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான செப்டெம்பர் 8ஆம் திகதி, உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் மூலம் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்ட மனிதப்புதைகுழி விவகாரம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அந்த விவகாரத்திற்கும் இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணையில் இடம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

