யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய பின்வீதியில் உள்ள வீதி தடைக்கு அருகில் நேற்று (16-08) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்தார்.
இந்தச் சம்பவம் ஆலய திருவிழாவிற்கு வந்திருந்த பக்தர்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியது.
நல்லூர் ஆலய கார்த்திகை திருவிழா நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிலையில், பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு திரண்டிருந்தனர்.
இவ்வேளையில், கும்பல் ஒன்று வீதி தடைக்கு அருகிலுள்ள அரசடி பகுதியில், மக்கள் கூட்டம் மத்தியில் இளைஞன் ஒருவரை குறிவைத்து வாள்வெட்டு தாக்குதலை நடத்தியது.
தாக்குதலில் காயமடைந்த இளைஞன், தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள வீதி தடையைத் தாண்டி ஆலய சூழலை நோக்கி ஓடினார்.
எனினும் தாக்குதலாளிகள் வாளுடன் அவரைத் துரத்திச் சென்றும் தாக்குதல் நடத்த முயன்றனர்.
அந்த சமயம், ஆலய சூழலில் பாதுகாப்புப் பணியில் இருந்த பொலிஸார் விரைந்து தலையிட்டு, சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐந்து பேரை கைது செய்தனர்.
காயமடைந்த இளைஞன் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
நல்லூர் ஆலய திருவிழா நடைபெற்று வரும் நிலையில், ஆலயப் பகுதி முழுவதும் 600-க்கும் மேற்பட்ட பொலிஸார் சிவில் மற்றும் சீருடைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோதும், வன்முறை கும்பல் ஆலய சூழலில் வாள்வெட்டு தாக்குதலில் துணிந்திருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சி மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

