குழந்தைப் பெற்றெடுக்கும் ரோபோக்களின் மாதிரி அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன விஞ்ஞானிகள், மனித கருவை சுமந்து குழந்தை பெற்றெடுக்கக்கூடிய ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ‘ரோபோட்டிக்’ தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி வரும் சீனா, அண்மையில் ரோபோக்களுக்கென பிரத்யேக வணிக வளாகமொன்றையும் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து, சீனாவின் குவாங்சோவைச் சேர்ந்த கைவா டெக்னாலஜி நிறுவனம், குழந்தையை சுமந்து பெறக்கூடிய ரோபோவை உருவாக்கும் ஆய்வை முன்னெடுத்து வருகிறது. இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கி வருபவர், சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் ஜாங் கிபெங் ஆவார்.
இந்த தொழில்நுட்பம் வெற்றியடைந்தால், மலட்டுத்தன்மை உள்ள தம்பதியர்களுக்கும், உயிரியல் கர்ப்பத்தை விரும்பாதவர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
இது குறித்து டாக்டர் ஜாங் கிபெங் தெரிவித்ததாவது:
‘ஆய்வு தற்போது மேம்பட்ட நிலையில் உள்ளது.
ரோபோவின் வயிற்றில் செயற்கை கருப்பை பொருத்தப்பட்டு, செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்யப்படும்.
கரு அதில் வளர்ந்து குழந்தை உருவாகும். இந்த ரோபோவின் மாதிரி அடுத்த ஆண்டுக்குள் அறிமுகமாகும்’ என்றார்.
மேலும், இந்த முயற்சி 2017 ஆம் ஆண்டில் நடந்த ஆய்வை அடிப்படையாகக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அப்போது, ‘பயோபேக்’ எனப்படும் செயற்கை கருப்பை திரவம் பயன்படுத்தி ஆடுகளின் கரு வெற்றிகரமாக வளர்க்கப்பட்டிருந்தது.

