வடக்கு–கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்த போதிலும், யாழ்ப்பாணம் வழமைபோல் இயங்கிவருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் முல்லைத்தீவில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அந்த இளைஞர், முல்லைத்தீவிலுள்ள இராணுவ முகாமுக்குள் நுழைந்த நிலையில், பின்னர் அருகிலுள்ள ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் தமிழ் மக்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
இளைஞர், இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து இரண்டு சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
இந்த மரணத்திற்கு நீதிகோரி, தமிழரசுக்கட்சி வடக்கு–கிழக்கில் ஹர்த்தால் நடத்த அழைப்பு விடுத்தது.
ஆரம்பத்தில் கடந்த 15ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்ட போராட்டம், பல்வேறு காரணங்களால் இன்று திங்கட்கிழமை (18ஆம் திகதி)க்கு பிற்போடப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு பல தரப்பினரின் ஆதரவு கிடைத்தாலும், அதே நேரத்தில் சில தரப்பினரின் எதிர்ப்பும் எழுந்தது.
இதேவேளை, நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த சம்பவத்தை பயன்படுத்தி அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து பொய்யான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சுமத்தினார்.
மேலும், சில அரசியல் குழுக்கள் உண்மைகளைத் திரித்து தவறான தகவல்களைப் பரப்பி, வடக்கு–கிழக்கு மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இத்தகைய பொய்யான பிரச்சாரங்களுக்கு மக்கள் ஏமாறாமல், உண்மைகளைப் புரிந்துகொண்டு அமைதியாக நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

