திருக்கோவில் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் எஸ். சசிக்குமார் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
அதன் முதற்கட்டமாக, பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அதிக விளைச்சல் தரக்கூடிய முருங்கை மரங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தவிசாளர் சசிக்குமார் அவர்களின் சொந்த நிதியில் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 முருங்கை மரங்கள் வழங்கப்படுகின்றன. இந்த முயற்சியை பயனாளிகள் வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றால், குறித்த குடும்பங்களுக்கு மேலதிக வருமானம் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும்.
முருங்கை மரம் உணவு, மருந்து மற்றும் வருமானம் தரும் பயிராக கருதப்படுகிறது.
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் சிறு தொழிலாகவும் முருங்கை வளர்ப்பு பார்க்கப்படுகிறது.
இதன் இலை, காய், விதை அனைத்தும் சத்துக்கள் நிறைந்தவையாக இருந்து மக்கள் நலனுக்குப் பெரிதும் உதவுகின்றன.
இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு சத்து நிறைந்த உணவுப் பொருட்களை வழங்குதல், சிறு மற்றும் நடுத்தர குடும்பங்களின் வருமானத்தை உயர்த்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சூழலியல் சமநிலையை பேணுதல் ஆகியவை தவிசாளர் சசிக்குமார் அவர்களின் பிரதான நோக்கங்களாகும்.
முருங்கை வளர்ப்பின் மூலம் பிரதேச மக்களின் சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் மத்தியில் இந்த திட்டம் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


