வடக்கு மற்றும் கிழக்கில் இன்று (18) முழு கதவடைப்பு போராட்டம் நடைபெறும் என இலங்கை தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்திருந்த போதிலும், முல்லைத்தீவு மற்றும் அம்பாறை பகுதிகளில் செயற்பாடுகள் வழமைபோல் நடைபெற்றன.
வடக்கில் அதிகரித்திருக்கும் இராணுவப் பிரசன்னம் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிராக இந்தக் கடையடைப்பு போராட்டத்திற்கான அழைப்பை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வெளியிட்டிருந்தார்.
அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் ஆதரவு கிடைத்திருந்தாலும், அதற்கு இணையாக எதிர்ப்புகளும் எழுந்தன.
எனினும், நேற்றையதினம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் போராட்ட நேரம் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை உள்ளடக்கிய பல பகுதிகளில் அனைத்து செயற்பாடுகளும் இயல்பு போன்று நடைபெற்றன.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், மாவடிப்பள்ளி போன்ற முக்கிய இடங்களில் உணவகங்கள், புடவைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், வங்கிகள், எரிபொருள் நிலையங்கள் உள்ளிட்ட வணிக நிலையங்கள் வழமைபோல் இயங்கின.
மருந்தகங்கள், பாடசாலைகள் திறந்திருந்தன. சில பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்திருந்தாலும், கற்றல் செயற்பாடு நடைபெற்றது.
கல்முனை பொது சந்தை மற்றும் அதைச் சூழ்ந்த வீதியோரங்களில் மரக்கறி வியாபாரம் வழமைபோல் களைகட்டியது.
பொதுமக்களின் பொருட்கொள்வனவிலும் குறிப்பிடத்தக்க அளவிலான சுழற்சி காணப்பட்டது.
சில இடங்களில் வாடிக்கையாளர்கள் குறைவாக இருந்ததால் வணிக நடவடிக்கைகள் மந்தமாக இருந்தன என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் கூடும் இடங்களில் பொலிஸாருடன் இணைந்து கடற்படை மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இதனால் பிரதேசங்களில் மக்களின் இயல்பான நடமாட்டம் இடையூறு இன்றி இடம்பெற்றது.

