தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) இடையிலான கருத்து முரண்பாடுகள் கடந்த சில மாதங்களாக தீவிரமடைந்துள்ளதாக அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன.
தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் ஜே.வி.பியின் பாரம்பரிய தலைவர்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அவருக்கு நெருக்கமான எம்.பிகள் மீது இவர்கள் பெரிதாக முக்கியத்துவம் தரவில்லை என தகவல்கள் வெளியாகின்றன.
நாடாளுமன்றத்தில் பிரதமர் வெளியிடும் கருத்துகளுக்கு சில அமைச்சர்கள் எதிர்மறை நிலைப்பாடு எடுப்பது, அரசாங்கத்திற்குள் நிலவும் கருத்து மோதல்களின் வெளிப்பாடாக கருதப்படுகிறது.
ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையிலான முரண்பாடுகள் குறித்து சில உண்மைகள் மட்டுமே இதுவரை வெளியில் தெரியவந்துள்ளன.
ஆனால் திரைக்குப் பின்னால் இன்னும் பல தெரியாத விடயங்கள் உள்ளன என்றும், இதன் விளைவாக ஜே.வி.பியுடன் தொடர்பில்லாத தேசிய மக்கள் சக்தியின் தனித்தனி குழுக்கள் உருவாகி வருவதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.
மக்கள் ஆணை தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்திருந்த போதிலும், பல முக்கியமான அரச முடிவுகள் ஜே.வி.பி பாரம்பரிய தலைவர்களின் அழுத்தத்தின்பேரில் எடுக்கப்படுகின்றன.
அவ்வாறான சூழலில் தேசிய மக்கள் சக்திக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை.
இதனால், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தெரிவான பல எம்.பிகள் குழப்பத்தில் உள்ளனர்.
அரசாங்கத்திற்குள் இவர்களுக்கு அங்கீகாரம் குறைவாக உள்ளது.
இவர்களில் பலர், ஜே.வி.பியால் தமக்கு ஏற்படும் அநீதிகள் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் பகிர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், அரசாங்கத்தில் தன் தரப்புக்கு போதிய ஆதரவு இல்லாததால், பிரதமர் ஹரிணி அமரசூரிய தற்போது அரசியல் ரீதியான மௌனத்தைத் தேர்வு செய்து வருகிறார்.

