தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான (P2P) போராட்டத்தின் நாயகர்கள் நாமே என தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், ‘சுமந்திரன் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை’ என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், பலருக்கு ஞாபக மறதி இருக்கலாம் அல்லது தமது அரசியலுக்காக உண்மையை மறந்து குற்றஞ்சாட்டலாம்.
ஆனால், கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களை நாங்களே முன்னெடுத்துள்ளோம்.
வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க கோரி போராட்டங்களை நடத்தியதுடன், காணி சுவீகரிப்புக்கு எதிராக சட்டப்போராட்டங்களையும் முன்னெடுத்தோம்.
அவை இன்னும் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.
அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி, கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டையில் மஹிந்த ராஜபக்சவின் சொந்த ஊரான தங்காலை வரையிலான பேரணியையும் முன்னெடுத்தோம்.
அப்போது பேரணிக்காக ஒதுக்கப்பட்ட வாகனத்தை பொலிஸார் காலி முகத்திடலில் பறிமுதல் செய்திருந்தபோதும், போராடி மீட்டெடுத்து எமது பேரணியை வெற்றிகரமாக முன்னெடுத்தோம்.
P2P போராட்டத்தை முன்னின்று பொலிகண்டி வரை கொண்டுசெல்லச் செய்ததும் நாமே.
அன்றைய தினம் சுமந்திரனும் சாணக்கியனும் இல்லையெனில், அந்தப் போராட்டம் பொத்துவிலிலேயே நிறுத்தப்பட்டிருக்கும் என அப்போது பல ஊடகச் சந்திப்புகளில் கூட குறிப்பிடப்பட்டது.
நாங்களே பொலிஸ் தடைகளை உடைத்து, பேரெழுச்சியுடன் பேரணியை பொலிகண்டி வரை கொண்டுசென்றோம்.
அதற்காக பொலிஸ் விசாரணைகளையும் எதிர்கொண்டோம்.
இந்த ஹர்த்தாலும் ஒரு அடையாளப் போராட்டமே.
வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து இராணுவ முகாம்கள் முற்றிலும் அகற்றப்படும் வரை எதிர்காலத்திலும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்

