அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை பகுதியில், அந்த பகுதியின் பெயரைக் குறிக்கும் பெயர்ப்பலகையை நிறுவுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர்கள் சிலர் அதனை தடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை – கல்முனை பிரதான வீதியில், வீரமுனை ஆண்டியர் சந்தியில் பெயர்ப்பலகையை நிறுவும் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை நேற்று மேற்கொண்டது.
ஆனால், அங்கு வந்த சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர்கள் இந்த செயற்பாட்டை இடைமறித்தனர்.
இதுகுறித்து பொலிஸாருக்கும் தகவல் அளிக்கப்பட்டபோதும், சம்பவ இடத்துக்கு வந்த சம்மாந்துறை பொலிஸார் பிரதேசசபை உறுப்பினர்களுக்கு சாதகமாகவே செயற்பட்டதாக வீரமுனை மக்கள் குற்றஞ்சாட்டினர்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான சாலையில் பெயர்ப்பலகை அமைப்பதற்கு பிரதேசசபையிடம் எந்தவித அனுமதியும் பெற வேண்டியதில்லை என்ற நிலையில், இரண்டு பிரதேசசபை உறுப்பினர்கள் இடையூறு விளைவித்தது மக்களின் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வீரமுனை வரவேற்பு கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கியபோது, போலியான காரணங்களை சுட்டிக்காட்டி தடுத்தவர்கள், மீண்டும் இதே போக்கில் செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
வீரமுனையின் அடையாளத்தை அழிக்க சில பிரதேசசபை உறுப்பினர்கள் தொடர்ச்சியாக செயற்படுவதை கண்டித்து, இது முற்றிலும் ஏற்க முடியாதது என அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


