யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சுயாதீனமான பன்னாட்டு நீதி விசாரணை அவசியம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கடந்த காலத்தில் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையில் குற்றவாளியாக தண்டிக்கப்பட்ட முன்னாள் இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, இராணுவம் மேற்கொண்ட கொடூரச் செயற்பாடுகள் குறித்து ஏற்கனவே நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருப்பதை நினைவுகூர்ந்தார்.
அவர் வழங்கிய பி2899 என்ற வழக்கு, தற்போதைய செம்மணி புதைகுழி விசாரணைகளுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும், சோமரத்ன ராஜபக்ஷ பன்னாட்டு நீதி விசாரணைகளில் உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை, எலும்புக்கூடுகளை அடையாளம் காணும் பணிக்காக வாக்குமூலமளிக்க வரும் பொதுமக்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அச்சுறுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், இந்த செயற்பாட்டை கடுமையாக கண்டித்தார்.
இதுவரை செம்மணி புதைகுழியில் இருந்து 147 எலும்புக்கூட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரின் எலும்புக்கூடுகளுடன், குழந்தைகள் பயன்படுத்திய பால் போத்தில்கள், விளையாட்டுப் பொம்மைகள், சிறுமிகளின் உடைகள் உள்ளிட்ட சான்றுகளும் மீட்கப்பட்டுள்ளன.
90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் நிர்வாணமாக புதைக்கப்பட்டிருந்ததாக சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையும் வெளிவந்துள்ளது.
ரவிகரன், இந்த அகழ்வாய்வுகளில் பன்னாட்டு நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள், மனித உரிமை வல்லுநர்கள் பங்கேற்க வேண்டும் என்றும், பிரித்தானிய வெளியுறவு இராஜாங்க செயலாளர் டேவிட் லமி தெரிவித்த பன்னாட்டு உதவிக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், இராணுவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் நாட்டைவிட்டு தப்பியோடாமல் தடுக்க நடவடிக்கை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய முந்தைய சாட்சியங்களின் அடிப்படையில், செம்மணியில் 300–400 பேர் படுகொலை செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், பி2899 வழக்கு மீண்டும் யாழ்ப்பாண நீதிமன்றில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.
செம்மணி, கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட புதைகுழி விவகாரங்களுக்கு சுயாதீன பன்னாட்டு நீதி விசாரணை மட்டுமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உண்மையான நீதியை வழங்கும் வழி என ரவிகரன் தனது உரையை நிறைவு செய்தார்.

