செவ்வாய்க்கிழமை (19) காலை, மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த 27 வயது பெண் ஒருவர், தனது சகோதரியுடன் நீதிமன்றத்திலிருந்து வெளியேறியவுடன், ஒரு குழுவினரால் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தகவலின்படி, குறித்த பெண் 2023 ஆம் ஆண்டு தனது காதலருடன் பெற்றோருக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டிருந்தார். பின்னர் கணவன் வெளிநாடு சென்ற நிலையில், அவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்ததால், மனைவி விவாகரத்து கோரி மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், காதலன் நாட்டிற்கு திரும்பி நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். சம்பவ தினத்திலும் இருவரும் தங்களது உறவினர்களுடன் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
வழக்கு முடிந்து வெளியே வந்த போது, காதலனின் சகோதரி குறித்த பெண்ணின் வாயை அடைத்து பிடித்துக் கொண்டதாகவும், காதலன் அவரை இழுத்துச் சென்று ஆட்டோவில் ஏற்றியதாகவும் பொலிஸார் கூறினர். அச்சமயம் பெண்ணின் உறவினர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து காப்பாற்ற முயன்றபோது, ஆட்டோ சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று அவரை கீழே தள்ளிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் இந்தியத் தமிழ் திரைப்பட காட்சிகளைப் போன்ற முறையில் நடைபெற்றதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட பெண்ணின் சகோதரி, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

