மட்டக்களப்பு மாநகர சபையின் மூன்றாவது மாதாந்த அமர்வு நேற்று (21-08) மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.
இவ்வமர்வில், 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் திகதி இடம்பெற்ற சத்துருக்கொண்டான் படுகொலைக்காக நீதி கோரி, அப்போதைய இராணுவ முகாம் அமைந்த இடம் புதைகுழி தோண்டப்பட வேண்டும் எனும் பிரேரணை முன்வைக்கப்பட்டு, சபையினரின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர் தயாளன் கௌரி முன்வைத்த இந்த பிரேரணையில், 186 பொதுமக்கள் – சிறியோர் முதல் முதியோர் வரை – இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சுட்டும் வெட்டியும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.
படுகொலையின் பின்னர் நியமிக்கப்பட்ட நீதியரசர் பாலகிட்ணன் தலைமையிலான ஆணைக்குழுவின் விசாரணைகளில் இது உறுதி செய்யப்பட்டிருந்தபோதும், இதுவரை எந்தவித நீதி வழங்கப்படவில்லை என வலியுறுத்தப்பட்டது.
35 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நடைபெறும் போதெல்லாம் உறவினர்கள் பொலிஸ் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள் எனவும், தற்போது செம்மணி புதைகுழி தோண்டப்பட்டதுபோல் சத்துருக்கொண்டானிலும் புதைகுழி தோண்டப்பட வேண்டும் எனவும் பிரேரணையில் கோரப்பட்டது.
பிரேரணைக்கு முழு சபையினரின் ஆதரவு கிடைத்ததையடுத்து, சத்துருக்கொண்டான் படுகொலை 35ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு மாநகர சபையில் கலந்து கொண்ட அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

