கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
2023 செப்டம்பரில், ஹவானாவில் நடைபெற்ற பு77 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின் லண்டன் பயணத்தில் அவர் தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றதாகவும், அப்பயணத்தில் அரச நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நேற்று காலை 9 மணியளவில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு (ஊஐனு) வருகை தந்து வாக்குமூலம் அளித்ததையடுத்து, அவர் காவலில் எடுக்கப்பட்டார்.
பின்னர் கடுமையான பாதுகாப்பின் நடுவில் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அவருக்காக தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு குறித்து நீதிமன்றம் அரை மணி நேர இடைவேளைக்கு பின் விசாரணையை மேற்கொண்டது.
இடைவேளையின் போது மின்வெட்டு ஏற்பட்டதால் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே காத்திருந்தனர்.
இச்சம்பவத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள சார்பில் ஆஜரான கூடுதல் சட்டத்துறை பிரதிநிதி திலீப பீரிஸ், பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும் என்றும், விசாரணை இன்னும் நிறைவுபெறாததால் விக்ரமசிங்கவைக் காவலில் வைக்க வேண்டும் என்றும் கோரினார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி வழக்கறிஞர் அனுஜா பிரேமரத்ன, முன்னாள் ஜனாதிபதியின் சார்பில் ஆதாரங்களை முன்வைத்து, அவருக்கு பிணை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
முன்னதாக, கடந்த ஜூன் 24ஆம் திகதி இந்த வழக்கு தொடர்பில் ஊஐனு நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்ததோடு, முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சந்த்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க உள்ளிட்டோரின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டிருந்தன.


