வடக்கு மக்களுக்குரிய காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என்ற உறுதிப்பாட்டில் ஜனாதிபதி இருப்பதாகவும், தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கும் சுமூகமான தீர்வு காணப்படும் எனவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
‘ரணில் விக்கிரமசிங்கவை யாரும் தொட முடியாது, அவர் சர்வதேசத்தில் வல்லவர், அவரோடு விளையாட முடியாது என எதிரணியினர் தொடர்ந்து கூறிவந்தனர்.
ஆனால் இன்று அவர்மீது சட்டம் பாய்ந்துள்ளதால் ராஜபக்சக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாட்டுக்கு தீங்கு விளைவித்தது ரணிலா, ராஜபக்சவா என்பது எங்களுக்கு முக்கியமில்லை.
எவராக இருந்தாலும் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டம் உரிய நடவடிக்கை எடுக்கும்.
அடுத்த சில வாரங்களில் வடக்கு அரசியல்வாதிகளின் வாழ்விலும் மாற்றம் வரும்.
மக்களுக்கு சொந்தமான அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடு.
தையிட்டி விகாரைப் பிரச்சினையும் சுமூகமாகத் தீர்க்கப்படும்.
வடக்குக்கு வரும் சுற்றுலா மற்றும் முதலீடுகள் தொடர்பில் சில அதிகாரிகள் தாமதம், இழுத்தடிப்பு செய்கின்றனர்.
அவர்களையும் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டார்.

