பல தசாப்தங்களாக ‘மிஸ்டர் க்ளீன்’ என்ற பெயரில் அரசியலில் அறியப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, ஊழலால் களங்கமில்லாத தலைவராகக் கருதப்பட்டார்.
ஆனால் 2015இல் மத்திய வங்கி பத்திர மோசடி அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியது.
பல முறை பிரதமராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றிய அவர், 2022இல் ‘அரகலய’ போராட்டத்துக்குப் பின் திடீர் சூழ்நிலையில் ஜனாதிபதியானார்
இப்போது அவர் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால், பொதுமக்களின் நிதியை தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஏற்பட்ட கைது ஆகும்.
வாழ்நாளில் எந்த வகைச் சலுகைகளையும் ஏற்காதவர், தனது சொந்த இல்லத்தையே கல்வி நிலையத்திற்கு அன்பளிப்பாக வழங்கியவர் என்ற நிலையிலும் தனிப்பட்ட நிகழ்வில் பாதுகாப்பு செலவினங்கள் காரணமாக குற்றவாளியாகக் குற்றஞ்சாட்டப்படுவது கடுமையான அவமதிப்பாகும்.
ஆனால் இது ஒருவரின் அவமானம் மட்டுமல்ல் அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் தெரிவுசெய்யப்பட்ட நீதி செயல்முறையின் ஆபத்தான முன்னுதாரணமாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த கைது நியாயத்தை நிலைநிறுத்தியது அல்ல, மாறாக அரசியல் பழிவாங்கலின் தோற்றத்தை வலுப்படுத்தியுள்ளது.
சிலர் கைது குறித்து முன்கூட்டியே அறிவித்தது, நீதித்துறையின் சுதந்திரம் குறித்து சந்தேகம் எழச் செய்துள்ளது.
அதே சமயம் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் எதிர்கொள்ளும் தற்போதைய பல அமைச்சர்கள் மீது விசாரணைகள் மெதுவாக நடைபெறுவதோடு, ஈஸ்டர் தாக்குதல் மற்றும் வீசா மோசடி போன்ற முக்கிய வழக்குகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இதன் மத்தியில் விக்கிரமசிங்க மீது அதிவேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது அரசியல் நோக்கம் கொண்டதாகவே தெரிகிறது.
இந்த கைது விக்கிரமசிங்கவுக்கு எதிர்மறை விளைவாக இல்லாமல், மாறாக அவரை மீண்டும் அரசியலின் மையப் புள்ளியாக மாற்றியுள்ளது.
ஒருகாலத்தில் விமர்சித்தவர்களிடமிருந்து கூட அவருக்கு இரங்கலும் ஆதரவும் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
சிதைந்திருக்கும் எதிர்க்கட்சி அவரைச் சுற்றி ஒன்றுபடும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.
எனினும் மிகப்பெரிய பாதிப்பு ஜனாதிபதி பதவியிலேயே உள்ளது.
அரசுத் தலைவர் எந்த நிகழ்விலும் தனிப்பட்டவராகச் செல்ல முடியாது; பாதுகாப்பும் பயண வசதிகளும் தவிர்க்க முடியாத அரசுச் செலவாகும்.
இதனை குற்றமாகக் கருதினால், முன்னாள் மற்றும் வருங்கால அனைத்து ஜனாதிபதிகளும்; இதே ஆபத்தில் சிக்கக்கூடும்.
இதனால் அந்தப் பதவியின் மரியாதையும் பாதுகாப்பும் அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமாக மாறும் அபாயம் உள்ளது.
ரணில் விக்கிரமசிங்கின் கைது இலங்கையின் அரசியல் பாதையில் முக்கிய திருப்பமாக நினைவில் நிற்கும்.
இது சட்டத்தின் பலவீனத்தையும் தெரிவுசெய்யப்பட்ட நீதியின் ஆபத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
அரசாங்கம் எதிரியை பலவீனப்படுத்த நினைத்த நிலையில், மாறாக விக்கிரமசிங்கின் அரசியல் வாழ்வை உயிர்ப்பித்து, ஜனாதிபதி பதவியின் கண்ணியத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
நாடு எந்தவிதத்திலும் தெரிவுசெய்யப்பட்ட நீதியை அடிப்படையாகக் கொண்டு முன்னேற முடியாது.
சட்டம் எல்லோருக்கும் சமமாகப் பயன்படுத்தப்படாவிட்டால் அது அதிகாரத்தில் இருப்போரின் விளையாட்டு கருவியாக மட்டுமே மாறும்.
