முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கடும் கண்டனத்தை வெளியிட்டன.
‘அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த ஊடகச் சந்திப்பில், அரசாங்கம் சட்டத்தை அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டப்பட்டது.
இன்று கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகச் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், தொழிலாளர் தேசிய சங்கத் தலைவர் பழனி திகாம்பரம், ஐக்கிய குடியரசு முன்னணித் தலைவர் பாட்டலி சம்பிக்க, யு.என்.பி. நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல, பொதுஜன பெரமுன பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர்.
முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்கவில்லை.
ஆனால் சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளியிட்ட அறிக்கையை தலதா அதுகோரல ஊடகச் சந்திப்பில் வாசித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ‘ரணில் விக்கிரமசிங்க கைது ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் என தெரிவித்துள்ளார்.
1948இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து பல கட்டமாக வளர்ந்த ஜனநாயகம் இன்று ஆபத்தில் உள்ளது.
கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணைந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும்.
ரணிலின் விடுதலிக்காக எங்களால் இயன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்போம்’ என்றார்.
முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், விசாரணைகள் முடிவடையாமல் விளக்க மறியலில் வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்துவதே இன்றைய நிலைமை.
ஜனநாயக நிறுவனங்கள் முற்றிலும் பாதிக்கப்படுகின்றன’ என்று விமர்சித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே அடிப்படை.
ஆனால் நடைமுறையில் அது காக்கப்படுவதில் சந்தேகம் உள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு கூட சமூக வலைதளங்களில் முன்கூட்டியே அறிவிக்கப்படுவது ஜனநாயக விரோதம்’ என்றார்.
இவ்வாறு உரையாற்றிய தலைவர்கள், ‘இன்று ரணிலுக்கு நேர்ந்தது நாளை யாருக்கும் ஏற்படலாம்.
ஆகவே அரசியல் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க வேண்டும்’ என வலியுறுத்தினர்.

