(நூருல் ஹுதா உமர்)
பேராசிரியர், கலாநிதி எஸ்.எல். றியாஸ் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளில் எழுதிய 65 நூல்களின் அறிமுகமும் கண்காட்சியும் நேற்று (23-08) சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு பன்னூலாசிரியர் கலாபூசணம் ஏ. பீர் முஹம்மது தலைமையில் இடம்பெற்றது.
1996ஆம் ஆண்டு நவமணி பத்திரிகையில் கிழக்கு மாகாண செய்தியாளராக பணியாற்றத் தொடங்கிய எஸ்.எல். றியாஸ், தனது எழுத்து பணி மூலம் ஊடக உலகில் பிரகாசித்தார்.
அதே ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணி உலகக்கிண்ணம் வென்றதைத் தொடர்ந்து, ஊடகவியலாளர் எம்.எம். ஜெஸ்மினுடன் இணைந்து ‘சர்வதேச கிரிக்கெட் நிகழ்வுகள்’ என்ற நூலை 2001இல் வெளியிட்டார்.
அது அவரின் முதலாவது நூலாகும்.
அதிலிருந்து தொடர்ந்து அவர் பல்வேறு துறைகளில் ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார்.
குழந்தை உளவியல் குறித்த 1,400 பக்கங்களைக் கொண்ட ஆய்வு நூலை இரண்டு பாகங்களாக வெளியிட்டதுடன், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டங்கள் குறித்த 1,100 பக்க ஆய்வையும் ஒரே நூலாக தொகுத்துள்ளார்.
இந்தியாவில் முஸ்லிம்கள் மீதான வன்முறைகளைப் பற்றிய 1,700 பக்கங்களைக் கொண்ட மூன்று பாக ஆய்வும், இலங்கை முஸ்லிம்களுக்கு அரசியல் கட்சி தேவைப்பட்டதன் பின்னணி குறித்த 750 பக்க ஆய்வும் அவரின் படைப்புகளில் அடங்கும்.
அத்துடன்;, சுழன்றாழ்வும் துரதனையும் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தால் சமூக ஊடகங்கள் எவ்வாறு அவர்களின் வாழ்க்கையை பாதித்திருக்கும் என்ற கற்பனை நூல் உட்பட, தேசிய இனப்பிரச்சினை தொடர்பான பல்வேறு நூல்களும் இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
இந்த நிகழ்வில் மூத்த உலமா ‘வரலாற்றில் ஒரு ஏடு புகழ்’ மௌலவி ஏ.சி.எம். புகாரி, பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. அஸ்ரப் தாஹிர், ஏ. ஆதம்பாவா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எம். நௌசாத், நிர்வாக சேவை அதிகாரிகள், சமூக அமைப்புகளின் தலைவர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், மேலும் கலாநிதி எஸ்.எல். றியாஸ் அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.


