லங்கா கோல் நிறுவனத் தலைவரின் ராஜினாமா, நிலக்கரி டெண்டர் முறைகேடுகளுக்கு எதிரான எதிர்ப்பின் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படும் ஊகங்களுக்கு அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என முன்னணி சோசலிசக் கட்சியின் (குளுP) கல்வி செயலாளர் புபுது ஜயகொடா கோரிக்கை விடுத்துள்ளார்.
நுகேகொடாவில் கடந்த வெள்ளிக்கிழமை (22-08) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் பேசியபோது, டெண்டர் வழங்கும் செயல்முறையில் கடுமையான முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டினார்.
தேசிய கொள்முதல் வழிகாட்டுதலின்படி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆறு வாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் இம்முறை மூன்று வாரங்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், இதனால் பரந்த அளவிலான போட்டியாளர்கள் பங்கேற்பது தடைசெய்யப்பட்டு, முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்ட தரப்பிற்கு ஒப்பந்தம் வழங்கும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
அரசாங்கம் இதை ‘அவசரநிலை’ காரணமாக நேரம் குறைக்கப்பட்டதாக கூறினாலும், அந்த அவசரநிலை என்ன என்பதை விளக்கத் தவறிவிட்டதாகவும் ஜயகொடா சுட்டிக்காட்டினார்.
வழக்கமான பிப்ரவரிஇமே கால அட்டவணைக்கு பதிலாக ஆகஸ்ட் மாதத்தில் டெண்டர் அழைப்பு நடத்தப்பட்டதால், முதல் நிலக்கரி சரக்கு செப்டம்பர் மாதத்துக்கு பதிலாக நவம்பரில் இலங்கையை அடையும்.
இதனால் நிலக்கரி பற்றாக்குறை உருவாகும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
இந்த தாமதங்கள் நாட்டை அதிக விலைக்கு நிலக்கரி வாங்க வற்புறுத்தும்; இதன் சுமை இறுதியில் மின்சார நுகர்வோரின் கட்டணங்களில் பிரதிபலிக்கும்.
மழை குறைந்தால், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மின்வெட்டும் ஏற்படும் அபாயம் உள்ளது என்று அவர் எச்சரித்தார்.
மேலும், இத்தாமதம் தனியார் டீசல் மின்நிலைய இயக்குநர்களுக்கு நன்மை தரும் வகையில் திட்டமிடப்பட்டதாக சந்தேகம் இருப்பதாகவும், ஒரு பிரபல நபருடன் தொடர்புடைய நிறுவனமொன்று ஆதரவுப் பெறுகிறது என்றும், அதே நிறுவனம் முன்பு உகாண்டாவுடன் தொடர்புடைய சர்ச்சைக்குரிய நிதி பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
‘முன்பு ராஜபக்ச ஆட்சிக் கால ஊழலை விமர்சித்த அரசு, இப்போது தமக்குச் சுற்றியுள்ள ஒருவருக்கு இவ்வாறு ஒப்பந்தம் வழங்குவது அரசியல் நெறிமுறைக்கு எதிரான கடுமையான பிரச்சினை.
நாட்டின் மின் துறையே ஒருவரின் சுயநலத்துக்காக தியாகம் செய்யப்பட்டுள்ளது’ என்று ஜயகொடா கடுமையாக விமர்சித்தார்.
அரசாங்கம் உடனடியாக மக்களுக்கு முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

