செம்மணி புதைகுழி விசாரணைக்கு சர்வதேச தொழில்நுட்ப உதவி தேவைப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் இதுவரை எந்த ஒரு நாட்டிடமும் உதவி கோரப்படவில்லை.
தேசிய ஒருங்கிணைப்பு துணை அமைச்சர் முனீர் முலாஃபார் தெரிவித்துள்ளார்
‘செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை பரிசோதிப்பதற்காக சர்வதேச நிபுணர்களின் தொழில்நுட்ப உதவி தேவைப்படுகிறது.
இதற்கான விவாதங்கள் தற்போது நீதியமைச்சு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு சார்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆனால் இதுவரை எந்த ஒரு நாட்டுக்கும் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுக்கப்படவில்லை’ எனக் குறிப்பிட்டார்.
சமீபத்திய அகழ்வாராய்ச்சியில் 100-க்கு மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் சர்வதேச சட்ட நிபுணர் ஆணையம் உள்ளிட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகள், உண்மை மற்றும் பொறுப்புணர்வை நிலைநிறுத்தும் நோக்கில் சர்வதேச கண்காணிப்பு அவசியம் என வலியுறுத்தியிருந்தன.
முன்னதாக முலாஃபார் விளக்கமளித்தபோது,
‘புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்களை பரிசோதிக்க சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்களின் உதவி தேவைப்படலாம்.
ஆனால் விசாரணை நடைமுறைகளுக்கு அரசாங்கம் முழுமையான ஆதரவு வழங்குவதால், இதைத் தவிர வேறு எந்த வகையான சர்வதேச தலையீடும் தேவையில்லை’ எனவும் தெரிவித்துள்ளார்.
செம்மணி புதைகுழி முதன்முதலில் 1990களின் இறுதியில் வெளிச்சத்துக்கு வந்தது.
உள்நாட்டுப் போரின்போது வலிந்து காணாமல் ஆக்கல்கள் மற்றும் நீதிவழியற்றக் கொலைகள் தொடர்பாக சந்தேகிக்கப்படும் பல இடங்களில் இதுவும் ஒன்றாகும். சமீபத்திய அகழ்வில் மீண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் வெளிப்படுத்தப்பட்டதால், இலங்கையின் தீர்க்கப்படாத புதைகுழி வழக்குகள் மீதான கவனம் மீண்டும் எழுந்துள்ளது.
இதேபோன்ற மனித எச்சங்கள் மன்னார், மாத்தளை, சத்துருக்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளிலும் கண்டறியப்பட்டிருந்தாலும், அவற்றில் பல விசாரணைகள் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு சென்றடையாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

