தியாகி பொன் சிவகுமாரின் 75வது பிறந்தநாள் நினைவு தினம் நேற்று (26-08) உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலையில் தியாகி பொன் சிவகுமார் நினைவேந்தல் குழு உறுப்பினர் எஸ்.செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் ப.சீவரத்தினம மற்றும் நினைவேந்தல் குழு உறுப்பினர்கள் உட்பட சிலர் கலந்து கொண்டனர்.
பொன்னுத்துரை சிவகுமாரன் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார்.
யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி வீரச்சாவை தழுவினார்.
ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
உரும்பிராயில் 1950 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26 ம் திகதி பொன்னுத்துரை, அன்னலட்சுமி ஆகியோருக்கு மூன்றாவது மகவாக சிவகுமாரன் பிறந்தார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வி கற்றவர். பின்னர் தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தில் தன்னை ஈடுபடுதியிருந்த போது பொலிஸாரிடம் உயிருடன் பிடிபடக்கூடாதென்ற நோக்கில் சயனைட் நஞ்சருந்தி உயிரிழந்தார்.


