மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான உறுதியான சட்டம் தற்போது இல்லையென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, மாகாண சபைத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சட்டமியற்றும் அதிகாரம் கிடையாது.
எனவே, அவ்விதமான தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஊடாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஜனநாயக முறைமைக்கமைய தேர்தலை நடத்த முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தேர்தல் முறைமை குறித்து நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் மேலும் கூறியதாவது, வரவிருக்கும் நான்கு ஆண்டுகளுக்கான தேர்தல் மூலோபாயத் திட்டங்களை வகுப்பதில் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளது.
மாகாண சபைகள் மறக்கப்படவில்லை. ஆனால் தற்போது மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அரச அதிகாரிகளின் மூலம் மாகாண சபைகள் நிர்வகிக்கப்படுவது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல.
தேர்தலை நடத்துவதற்கு சட்ட அடிப்படை அவசியம். சட்டமின்றி தேர்தலை நடத்தும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இல்லை.
எமது விருப்பப்படி சட்டம் இயற்ற இயலாது. பாராளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றப்படும் சட்டத்திற்கு ஏற்ப மட்டுமே தேர்தலை நடத்த முடியும்.
மாகாண சபைத் தேர்தலுக்கான உறுதியான சட்டம் தற்போது இல்லாத நிலையில், விரைவாக தேர்தலை நடத்த அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆணைக்குழு முழுமையாக ஒத்துழைக்கும்.
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகளால் மட்டுமே நிர்வாக முடிவுகள் எடுக்கப்படுவது சிக்கலானதாக இருப்பதால், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசு பாராளுமன்றத்தின் மூலம் உரிய தீர்மானம் எடுக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

