அரசாங்கம், 2030ஆம் ஆண்டுக்குள் 4,200 மில்லியன் தேங்காய்களை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளதாக விவசாய தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
இதனை அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
2030க்குள் உலகளாவிய தேங்காய் சந்தையின் பெறுமதி சுமார் 19 பில்லியன் அமெரிக்க டொலர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், போட்டியில் நிலைத்திருக்க இலங்கை தனது தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அவர் கூறினார்.
நேற்று (26-08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக ‘வடக்கு தேங்காய் முக்கோணம்’ திட்டத்தின் மூலம் வட மாகாணத்தின் அனைத்து ஐந்து மாவட்டங்களிலும் தேங்காய் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
2025, 2026, 2027 ஆகிய மூன்று ஆண்டுகளில் வட மாகாணத்தில் மொத்தம் 40,000 ஏக்கர் புதிய தேங்காய் பயிரிடப்படும்.
ஏற்கனவே 2025ஆம் ஆண்டுக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்காக நடைபெற்று வரும் பட்ஜெட் விவாதங்களில் 600 மில்லியன் ரூபா ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
‘வடமாகாணத்தில் தேங்காய் தொழில்துறையை மீண்டும் நிலைநிறுத்துவதன் மூலம் தேங்காய் உற்பத்தி மட்டுமல்லாமல், பொருளாதார பங்களிப்பையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்,’ என சந்திரகீர்த்தி குறிப்பிட்டார்.
தற்போது, தேங்காய் ஏற்றுமதி நாடுகளிலும் உற்பத்தி நாடுகளிலும் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

