கடந்த 27 ஆம் திகதி உச்சநீதிமன்ற முன்றலில் ஊடகங்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சா, தாம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் 2025 அக்டோபர் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
இந்த மனு, இலங்கை – இந்தியா இடையே கையெழுத்தான டிஜிட்டல் அடையாள அட்டைப் திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) செல்லாததாக்க வேண்டும் என கோருகிறது.
குறித்த திட்டம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக விமல் வீரவன்சா மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதன்மை நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு நீதியரசர்கள் குமுதினி விக்கிரமசிங்க மற்றும் சம்பத் விஜேரத்ன உட்பட்டவர்கள் இந்த மனுவை விசாரிக்கவுள்ளனர்
மனுவில் பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரிய, ஜனாதிபதி மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் அனுரா குமார திசாநாயக்க உள்ளிட்ட அமைச்சரவையினரை உள்ளடக்கிய 31 பேரை பதிலளிப்பவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவில், இந்தியாவுடன் இவ்வொப்பந்தத்தில் கையொப்பமிடுவதன் மூலம் இலங்கை குடிமக்களின் தரவுகள் (biometric data) இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், இது நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தம் இலங்கையின் இறையான்மை தேசிய பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இலங்கை அரசு கடந்த ஜூலை 31 ஆம் திகதி, தேசிய டிஜிட்டல் அடையாள அட்டைப் திட்டம் 2026 ஏப்ரல் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தது.
இந்தத் திட்டம், பொதுச் சேவைகளுக்கான அணுகலை மாற்றியமைத்து, குடிமக்கள் தரவுகள் பாதுகாப்பும், தனியுரிமையும் உறுதிசெய்யும் வகையில் செயல்படுத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்தது.
இத்திட்டம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்தின் கீழ் முன்னெடுக்கப்படுவதுடன், இந்திய அரசாங்கம் வழங்கும் சுமார் 10.4 பில்லியன் மானியத்தின் மூலம் நிதியளிக்கப்படுகிறது.

