ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பங்களுடன் ‘நீதியின் ஓலம்’ எனும் போராட்டம் நிறைவுற்றது.
இந்த கையொப்பங்கள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபைக்குச் அனுப்பவுள்ளதாக தாயகச் செயலணி அமைப்பின் வடக்கு இணைப்பாளர் ஜெயசித்திரா தெரிவித்துள்ளார்.
‘நீதியின் ஓலம்’ எனும் கையொப்பப் போராட்டம், ஒன்பது முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 23 ஆம் திகதி சனிக்கிழமை வடக்கு மற்றும் கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டது.
இப்போராட்டத்தின் பிரதான நிகழ்வு, தமிழர் படுகொலையின் சாட்சியிடமாகிய யாழ்ப்பாணம் செம்மணியில் தொடங்கி, வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் அதே இடத்தில் நிறைவுற்றது.
தாயகச் செயலணி அமைப்பு முன்னெடுத்த இந்த கையொப்பச் சேகரிப்பு, தமிழினப் படுகொலைக்கான சர்வதேச நீதி கோரிக்கையை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
கடந்த ஐந்து நாட்கள் நீடித்த இப்போராட்டத்தில் வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இத்தருணத்தில் சுமார் 1 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கையொப்பமிட்டிருந்தனர்.
இந்த போராட்டம் மூலம் செம்மணி உட்பட இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், வரவிருக்கும் செப்டம்பர் மாத ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதே போராட்டத்தின் முக்கியக் கோரிக்கையாகும்.

