வேலணை – மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் உள்ள வயல்வெளிகளில் புதர்களுக்கு விசமிகள் தீவைத்ததால், அப்பகுதியைச் சுற்றி சென்ற மக்களுக்கு வீதியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து பிரதேச சபைத் தவிசாளருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, உடனடி நடவடிக்கையாக யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது.
தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி, கடும் காற்றால் பரவிய பெரும் சுடருடன் எரிந்த தீயை கட்டுப்படுத்தினர்.
அல்லைப்பிட்டி அலுமினியம் தொழிற்சாலை பகுதியிலிருந்து அராலிச் சந்தி வரையிலான வயல்வெளிகளில் ஆண்டுதோறும் விசமிகள் தீவைத்துவருவது வழக்கமாக மாறியுள்ளது.
இதனால் தீ அணைக்கும் பணிகளும் தொடர்கதையாகி வருகின்றன.
ஆனால் இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் விசமிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
குறிப்பாக, இப்பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பருவ காலங்களில் பல வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து தங்கள் இனப்பெருக்கங்களைச் செய்வது வழமையான ஒன்றாகும். ஆனால் இவ்வாறான தீவைப்புகள் அந்தப் பறவைகள் சரணாலயத்தையே ஆபத்துக்குள் தள்ளியுள்ளது.
மேலும், தீவைப்புகளால் புற்கள் எரிந்து அழிவதால் அவற்றை உணவாகக் கொண்டிருந்த கால்நடைகள் பசி காரணமாக வீடுகளுக்குள் நுழையும் நிலையும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

