இலங்கையில் மாணவர் சேர்க்கை 50-ஐவிட குறைவாக உள்ள சுமார் 1,400 பாடசாலைகள் இருப்பது பல ஆண்டுகளாகவே அரசாங்கத்துக்குத் தெரிந்த விடயமாகும்.
இப்பாடசாலைகள் பெரும்பாலும் கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் அமைந்துள்ளன.
அனைத்தும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கல்வி வழங்கும் ஆரம்பப்பாடசாலைகளே ஆகும்.
இவற்றில் பல நூற்றுக்கணக்கான பாடசாலைகள் நிரந்தரமாக மூடப்படும் அபாயத்தில் உள்ளன.
மாகாண வாரியாக பார்க்கும்போது, வட மாகாணத்தில் 275 பள்ளிகள் அதிகளவில் உள்ளன.
அதனைத் தொடர்ந்து மத்திய மாகாணம் 240, சபரகமுவ மாகாணம் 230, ஊவா மாகாணம் 158, கிழக்கு மாகாணம் 141, வடமேற்கு மாகாணம் 133, தென் மாகாணம் 125, வடமத்திய மாகாணம் 111, மற்றும் மேற்கு மாகாணம் 73 பாடசாலைகள் உள்ளன.
இந்த நிலையில், குறைந்த மாணவர் சேர்க்கையுள்ள பாடசாலைகளை மூடி, அருகிலுள்ள பள்ளிகளுக்கு மாணவர்களை மாற்ற வேண்டுமா என்பது குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கல்வி அதிகாரிகள் இதற்கு முன்னர் வெளியிட்ட தரவுகளின்படி, 60 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகள் 1,506 எனவும் தெரியவந்தது.
மொத்தத்தில், சுமார் 90,000 மாணவர்கள் இத்தகைய சிறிய பள்ளிகளின் மீது தங்கள் அடிப்படை கல்விக்காக நம்பிக்கைவைத்துள்ளனர்.
இதனால், ஜனாதிபதி, இப்பாடசாலைகளில் வழங்கப்படும் கல்வித் தரத்தை மதிப்பீடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இலங்கையில், அரசு கல்வி அமைப்பில் குறைபாடுகள் இருந்தபோதிலும், ஒவ்வொரு மாணவரும் குறைந்தபட்சம் ஒரு நிலையான கல்வியைப் பெற வேண்டும் என்பதில் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் உறுதியாக உள்ளனர்.
எனவே, 50 மாணவர்களுக்கு குறைவான 1,400 பள்ளிகளை மூடுவதற்கான அரசின் யோசனைக்கு பெற்றோர்களும் சமூகமும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அவர்கள், இப்பள்ளிகளை தக்கவைத்துக்கொள்ள கூடுதல் வளங்களையும் ஆதரவையும் வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், கடந்த இருபது ஆண்டுகளில் கல்விக்கான வரவுகள் குறைவாக வழங்கப்பட்டதும், தவறான கொள்கை முன்னுரிமைகளும் காரணமாக, பல சிறிய பாடசாலைகள் போதுமான ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்டு வருகின்றன.
அதோடு, மக்கள் தொகை மாற்றம், நகர்மயமாக்கம், கொவிட்-19 தொற்றின் தாக்கம், நீண்டகால பொருளாதார நெருக்கடி ஆகியவை மாணவர்களின் பள்ளிச் செல்லும் நிலையை பாதித்துள்ளன.
இதனால், பள்ளிவிடுப்பு விகிதம் அதிகரிக்கிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இத்தகைய சூழலில், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள்; மாணவர்களை படிப்பில் கவனம் செலுத்தச் செய்வதும், அவர்கள் முறையாக வருகை தருவதை உறுதி செய்வதும் கடினமான சவாலாகியுள்ளது.
எனவே, வெறும் அரசின் ஆதரவால் மட்டும் குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளைச் செயல்படுத்த முடியாது.
அரசாங்கம், சமூக அமைப்புகள், கல்வியாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த விரிவான அணுகுமுறையை மேற்கொள்வது அவசியமாகியுள்ளது.
இலங்கை அதிபர்கள் சங்கம் சமீபத்தில் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்களை அருகிலுள்ள பெரிய பள்ளிகளுக்கு மாற்றுவது நகர்ப்புற வகுப்பறைகளில் கூட்ட நெரிசலை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.
‘பள்ளிகளை மூடுவது தீர்வல்ல. குழந்தைகளை பெரிய பள்ளிகளுக்கு மாற்றுவது பயனற்றது.
சிறிய பள்ளிகளை மேம்படுத்தினால், குழந்தைகள் தங்களின் கிராமத்திலேயே கல்வி பெற முடியும்’ என்று ஊPரு தலைவர் பியாசிரி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நேற்று (27-08) கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சு, அனைத்துப் பள்ளிகளையும் ஒரே மாதிரி மூடும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும், ஒவ்வொரு பள்ளியின் சூழ்நிலைக்கு ஏற்ப தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அறிவித்தது. அமைச்சின் செயலாளர் கலுவேவா கூறுகையில்,
‘மாணவர் சேர்க்கை குறைவான அனைத்து பள்ளிகளையும் மூடும் முன்னேற்பாடு எதுவும் இல்லை.
முதலில் அந்த கல்வி வலயத்தில் ஒரு பள்ளியை மேம்படுத்துவோம்.
அருகில் பள்ளிகள் உள்ள நிலையில், மிகக் குறைவான மாணவர்கள் கொண்ட பள்ளிகளை பராமரிப்பதில் அர்த்தமில்லை.
அத்தகைய சூழலில் அவற்றை மூடலாம்’ என்றார்.
இதனால், கல்வியை மாணவர்கள் தங்கள் இல்லத்துக்கு அருகிலேயே தொடரவும் நிறைவு செய்யவும் வழிவகுக்கும் வகையில், விரிவான பங்குதாரர் ஆலோசனைகளுடன் ஒரு நீண்டகாலத் திட்டம் அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இலங்கையின் மிகப் பெரும் செல்வம் மனிதவளமே என்பதால், மக்கள் தொகை வீழ்ச்சியடையும் இக்காலத்தில் அடுத்த தலைமுறையை கல்வியறிவில்லாமல் விட இயலாது என்பது அவர்கள் கருத்தாகும்.
