இந்தோனேசியாவில் ஆறு இலங்கை அமைப்புசாரா குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் மேற்பார்வையாளர் எப். யூ. வூட்லர் தெரிவித்தார்.
ஜகார்த்தாவில், இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்துடன் இணைந்து, இந்தோனேசிய பொலிஸார் நடத்திய விசேட நடவடிக்கையின் போது இவர்களே கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ‘கெஹெல்பட்டரா பட்மே’, ‘கமாண்டோ சலிந்த’, ‘பண்டுரா நிலங்கா’, ‘தெம்பிலி லஹிரு’, ‘பேக்கோ சமன்’ மற்றும் அவரது மனைவி அடங்குவர். இவர்களுடன் மூன்று வயது குழந்தையும் இருந்தது.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் மாபொலிஸ் பிரியந்த வீரசூரிய நேற்று (28-08) செய்தியாளர்களைச் சந்தித்தபோது, துபாய், ஓமான், ரஷ்யா, பெலரஸ், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தங்கி செயல்படும் குற்றவாளிகளை கைது செய்வதற்கான திட்டங்கள் நடைமுறைக்கு வரும் என்றும், இதற்காக சர்வதேச ஒத்துழைப்பு பெறப்படுவதாகவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேருக்கு இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தியா, மலேசியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளின் புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளின் ஒத்துழைப்பால் இக்கைதுகள் சாத்தியமானது என வீரசூரிய தெரிவித்துள்ளாhர்
அமைச்சர் விஜேபாலவும் கருத்து தெரிவித்து, வெளிநாடுகளில் தங்கி செயல்படும் குற்றவாளிகளை பிடிக்க இலங்கை அதிகாரிகள் பல மூலோபாய திட்டங்களை முன்னெடுத்துள்ளதன் விளைவாக இந்தோனேசியாவில் கைது நிகழ்ந்தது எனக் கூறினார்.
‘ஏழு நாட்கள் நீடித்த விசேட நடவடிக்கையின் மூலம் சிஐடி மற்றும் இன்டர்போல், இந்திய புலனாய்வு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
சில குற்றவாளிகளுக்கு அரசியல்வாதிகளுடனான தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதால் அதுகுறித்தும் விசாரணை நடைபெறுகிறது’ என அவர் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும், குற்றவாளிகளை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் மேற்கொள்ளப்படும் என்றும், இவர்களின் சொத்துக்கள் பற்றிய விசாரணைகளும் நடைபெறுகின்றன என்றும் தெரிவித்தார்.
தற்போது சுமார் 75 பேருக்கு இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், 20க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், பொலிஸ் குற்றச் சாதனப் பிரிவு பணிப்பாளர் மூத்த எஸ்.எஸ்.பி. ருவான் குமாரா தெரிவித்ததாவது,
இலங்கையில் அமைப்புசாரா குற்றச் செயல்களை கண்காணித்து, பகுப்பாய்வு செய்ய மைய தரவுத்தளம் ஒன்றை நிறுவியிருப்பதாகவும், அதன் மூலம் பல கைது பிடிவிறாந்துகள் மற்றும் இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த ஆண்டு இதுவரை 200க்கும் மேற்பட்ட முக்கிய ஆயுதங்கள், குறிப்பாக டைப்-56 துப்பாக்கிகள், சப் மெஷின் கன், பிஸ்டல், ரிவால்வர், ரிப்பீட்டர் கன் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக 1,200க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 36 துப்பாக்கி சூட்டிகளும், 25 உதவியாளர்களும் (உதாரணமாக வாகன ஓட்டிகள்) உட்பட மொத்தம் 338 சந்தேகநபர்கள் இந்த ஆண்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

