அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு, டிரம்பின் வெளிநாட்டு கொள்கைக்கு பெரிய சவாலாக அமையக்கூடும்.
டிரம்ப் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு விதித்த “Reciprocal Tariffs” மற்றும் சீனா, மெக்சிகோ, கனடா ஆகியவற்றுக்கு விதித்த கூடுதல் வரிகளும் இத்தீர்ப்பின் கீழ் பாதிக்கப்படுகின்றன.
அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் 7க்கு 4 என்ற வாக்கு வித்தியாசத்தில், டிரம்ப் அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை (IEEPA) அடிப்படையாகக் கொண்டு விதித்த வரிகள் சட்டவிரோதம் எனவும், ‘சட்டத்திற்கு எதிரானவை’ எனவும் தீர்மானித்தது.
எனினும், இந்த தீர்ப்பு அக்டோபர் 14ஆம் திகதி வரை அமுலுக்கு வராது.
அதுவரை, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தனது Truth Social தளத்தில் டிரம்ப், இந்த தீர்ப்பை கடுமையாக விமர்சித்தார்.
‘இந்தத் தீர்ப்பு அமெரிக்காவை முற்றிலும் அழித்து விடும். எங்கள் வரிகளை நீக்க வேண்டும் என அவர்கள் சொல்வது தவறு. அது நாட்டுக்கு பேரழிவாக இருக்கும்’ எனக் குறிப்பிட்டார்.
டிரம்ப், வர்த்தக சமநிலையின்மை அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி, தேசிய அவசர நிலையை அறிவித்திருந்தார்.
ஆனால் நீதிமன்றம், சுங்க வரிகளை விதிப்பது காங்கிரஸின் அடிப்படை அதிகாரம் எனத் தீர்ப்பளித்தது.
127 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பில், 1977ஆம் ஆண்டு இயற்றப்பட்ட IEEPA சட்டத்தில் “tariff” அல்லது அதனுடன் தொடர்புடைய சொற்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், ஜனாதிபதிக்கு வரிகளை விதிக்கும் எல்லையற்ற அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும் விளக்கப்பட்டுள்ளது.
வரி மற்றும் சுங்கச் சட்டங்களை விதிப்பது காங்கிரஸின் பிரத்யேக அதிகாரம் என்றே நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்பு, சிறிய தொழில் நிறுவனங்களும் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பும் தாக்கல் செய்த இரண்டு வழக்குகளுக்கான பதிலாக வழங்கப்பட்டது.
டிரம்ப் ஏப்ரல் மாதத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு 10ம% அடிப்படை வரியையும், பல் நாடுகளுக்கு “Reciprocal Tariffs” ஐயும் அறிவித்திருந்தார்.
இதற்குமுன், நியூயார்க் சர்வதேச வர்த்தக நீதிமன்றமும் இந்த வரிகளை சட்டவிரோதமானவை என அறிவித்திருந்தது.
எனினும், மேல்முறையீடு காரணமாக அந்த தீர்ப்பு இடைநிறுத்தப்பட்டது.
கனடா, மெக்சிகோ, சீனா ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளும் இத்தீர்ப்பால் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகள் வேறு சட்ட அடிப்படையில் விதிக்கப்பட்டதால் அவை பாதிக்கப்படவில்லை.
வெள்ளை மாளிகை சட்டத்தரணிகள், இந்த வரிகளை நீக்குவது 1929ஆம் ஆண்டு நிகழ்ந்த பங்குச்சந்தை சரிவு போன்ற பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர்.
இப்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
சமீபகாலங்களில், காங்கிரஸ் நேரடியாக அனுமதிக்காத விரிவான கொள்கைகளை ஜனாதிபதிகள் முன்னெடுப்பதை உச்சநீதிமன்றம் சந்தேகத்துடன் பார்த்துள்ளது.
ஜோ பைடன் ஆட்சி காலத்தில் கூட, உச்சநீதிமன்றம் ; “Major Questions Doctrine” என்ற அடிப்படையில் பசுமை வீழ்ச்சி வாயுக் கட்டுப்பாடு மற்றும் மாணவர் கடன் தள்ளுபடி திட்டங்களை சட்டவிரோதமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது உச்சநீதிமன்றத்தில் 6 குடியரசுக் கட்சி நியமன நீதிபதிகள் உள்ளனர்.
அதில் 3 பேரை டிரம்ப் தானே நியமித்திருந்தார். எனவே, இறுதி தீர்ப்பு எந்தவிதமாக அமையும் என்பது கவனிக்கத்தக்கது.

