இலங்கை தனது முழுமையான எரிபொருள் தேவையையும் இறக்குமதி செய்வதோடு பொதுவாக திறந்த டெண்டர் முறையிலேயே விநியோகஸத்தர்களை தெரிவு செய்கிறது.
எனினும் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்துடன் ((UAE) நேரடி எரிபொருள் கொள்முதல் தொடர்பாக விலை பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவரின் கூற்றுப்படி UAE அரசு நிறுவனமான அபுதாபி நேஷனல் ஆயில் கம்பனியுடன் (ADNOC) தற்போது நேரடி கொள்முதல் குறித்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
‘விலை பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. போட்டித் தன்மையுடன் விலைகள் இருந்தால் நேரடி கொள்முதல் நடைமுறைக்கு வரும்’ என அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க இந்த ஆண்டு தொடக்கத்தில் ருயுநு ஜனாதிபதி முகமது பின் சாயித் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அத்துடன்; திருகோணமலையை எரிபொருள் மையமாக அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை இந்தியா ருயுநு ஆகிய மூன்று நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்தியாவும் இலங்கையும் இணைந்து பல்வேறு தயாரிப்புகளுக்கான பெட்ரோலிய குழாய் அமைக்கும் திட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றன.
அதேவேளை ஹம்பாந்தோட்டாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவுவதற்கான திட்டமும் இலங்கை முன்னெடுத்து வருகிறது.
சீன அரசுடைமை பெற்ற சினோபெக் நிறுவனத்தின் அமெரிக்க டொலர் 3.7 பில்லியன் முதலீட்டின் அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
இது இலங்கையின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடாகக் கருதப்படுகிறது.
ஹம்பாந்தோட்டை துறைமுக முதலீட்டு மண்டலத்தில் அமைக்கப்படவுள்ள இந்த நவீன சுத்திகரிப்பு ஆலை தொடர்பாக கடந்தகாலத்தில் நிலுவையில் இருந்த நீர் விநியோகம் நில ஒதுக்கீடு வரி தொடர்பான சிக்கல்களை விரைவாகத் தீர்க்கும் வகையில் இலங்கை அரசு மற்றும் சினோபெக் இடையே ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது.
எனினும் ஆரம்ப டெண்டர் நிபந்தனைகளில் மாற்றம் செய்யும் நோக்கில் தற்போது இருதரப்பும் மேலதிக கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதால் திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லையென்பது குறிப்பிடத்தக்கது

