கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் அகழ்வாராய்ச்சியின் போது, துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிப்பு காயங்களால் உயிரிழந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் எலும்புகள் மீட்கப்பட்டிருந்தன.
நீதிமன்ற உத்தரவின்படி புதைகுழி மூடப்பட்ட நிலையில், அங்கிருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களின் அடையாளத்தை வெளிப்படுத்த யாரும் இதுவரை முன்வரவில்லை.
இலங்கையின் ஆறாவது பெரிய மனித புதைகுழியாகக் கருதப்படும் கொக்குத்தொடுவாய் வழக்கு, முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகம் (ழுஆP) 2025 ஆகஸ்ட் 3ஆம் திகதி பத்திரிகை விளம்பரம் வெளியிட்டு, 2025 செப்டம்பர் 4ஆம் திகதிக்குள் மக்கள் தகவல் வழங்குமாறு அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால், மூன்று வாரங்கள் கடந்தும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
‘பொருட்களின் அடையாளம் காணப்படுவதற்கு கால அவகாசம் போதுமானதாக இல்லை.
ழுஆP அலுவலகமும் இன்று நீதிமன்றத்தில் தொடர்புடைய அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. எங்களுக்கும் எந்த தகவலும் வழங்கப்படவில்லை’ என அவர் கூறினார்.
மேலும், அடையாளம் காணும் வகையில் தகவல் உள்ளவர்கள் அச்சமின்றி முன்வருமாறு கேட்டுக்கொண்ட அவர், அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் வலியுறுத்தினார்.
ழுஆP வெளியிட்ட விளம்பரம் சரியான முறையில் மக்களைச் சென்றடைந்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த சட்டத்தரணி, ‘பத்திரிகை விளம்பரங்கள் உடனடியாக மக்களைச் சென்றடைவதில்லை.
அது சென்றடைந்ததா என்பதை மக்களிடம் கேட்டுதான் அறிய முடியும்’ என சுட்டிக்காட்டினார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து 30 மனித எலும்புகளுடன் தொடர்புடைய பிற பொருட்களின் பட்டியல் ழுஆP விளம்பரத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கிடையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழு 2024 மார்ச் மாதம் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில், புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் 1994–1996 காலப்பகுதிக்குட்பட்டவை என்றும், அவை முறையாக புதைக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
உயிரிழப்பதற்கு முன் பாதிக்கப்பட்டவர்கள் துப்பாக்கிச் சண்டையை எதிர்கொண்டிருக்கலாம் எனவும் அறிக்கை அனுமானித்தது.
மேலும், சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் கனகசபாபதி வாசுதேவன் தனது அறிக்கையில், ஜூலை 15, 2024 அன்று அகழ்வு நிறைவடைந்தபோது மீட்கப்பட்ட 52 உடல்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் துப்பாக்கிச் சூடு அல்லது வெடிப்பு காயங்களால் உயிரிழந்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, 2023 ஜூன் மாத இறுதியில், கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்திலிருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்களம் குழாய்கள் அமைக்கும் பணியின் போது, மனித உடல் பாகங்களும் ஆடைத் துண்டுகளும் வெளிப்பட்டதன் பேரிலேயே இவ்வகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

