செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது, ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்த நிலையில் இரண்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஒரு பெரிய எலும்புக்கூட்டின் நெஞ்சுப் பகுதியுடன் ஒப்பீட்டளவில் சிறிய எலும்புக்கூடு இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள் சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முழுமையாக அகழ்வுப் பணிகள் நிறைவு பெற்ற பின், சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே குறித்த எலும்புக்கூடுகள் தொடர்பான உறுதியான தகவல்களை வெளியிட முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அகழ்வுப் பணிகளின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிறியவர்கள் மற்றும் சிசுக்கள் சேர்ந்த எலும்புக்கூட்டு தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், ஒன்றுடன் ஒன்று அருகருகே புதைக்கப்பட்டதோடு, கால்கள் மடக்கப்பட்ட நிலையிலும் சில எலும்புக்கூட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இத்தகைய புதைப்புகள் அசாதாரணமாக தோன்றினாலும், அவற்றை சட்ட வைத்திய அதிகாரியின் ஆய்வுக்குப் பின் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் நடைபெற்று வரும் அகழ்வுப் பணிகள் நேற்று (29-08) வரை 46 நாட்களாக கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் போது மொத்தம் 174 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

