மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய முக்கிய நபர்கள் மீது பொதுமக்கள் நிதி மோசடி மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலையான சம்பவத்துக்குப் பிந்தைய நிலையில், இந்த நடவடிக்கைகள் அதிக கவனம் பெற்றுள்ளன.
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, ‘அனைத்து முக்கிய வழக்குகளும் தற்போது அரசாங்கத்தின் சிறப்பு அணிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன’ என தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், கீத் நொயஹர் வழக்கின் விசாரணை முடிவடைந்து சான்றுகள் மூன்றாவது முறை பிரதம நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஏற்கனவே சட்ட மா அதிபருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், பிரகீத் எக்நெலிகொடா வழக்கிலும் ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடைய அதே குழுவே விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
அழிக்கப்பட்ட சான்றுகள் உடனடியாக மீட்க முடியாது என்றாலும், உண்மையை கண்டறிய அரசாங்கம் உறுதியாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும், ஆனால் வழக்கு மிகவும் நுணுக்கமானது என்பதால் விவரங்கள் வெளியிடப்படமாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சகம் கையாளும் அதிகளவிலான வழக்குகள் காரணமாக விசாரணைகளில் தாமதம் ஏற்படுவதாகவும், ‘அரசு நிதி மோசடி உள்ளிட்ட பல பெரிய ஊழல் வழக்குகளை நாங்கள் கையாள்கிறோம்.
ஆனால் விசாரணை பிரிவுகளில் பணியாளர்கள் குறைவாக உள்ளதால் சில வழக்குகள் தாமதமாகின்றன’ எனவும் விளக்கமளித்தார்.
ஊழல் குறித்த கேள்விகளில் அமைச்சர், ‘ஊழல் என்பது ஊழலே. அது 100 ரூபா ஆனாலும், கோடிகள் ஆனாலும் குற்றம் தான். சட்டம் யாரையும் பாரபட்சமின்றி விசாரிக்கும்’ என்றார்.
முன்னாள் ஜனாதிபதி சிறிசேனாவின், ஈஸ்டர் தாக்குதலின் மூளையாளர் யார் எனத் தான் அறிந்திருப்பதாக கூறிய கருத்து குறித்து அமைச்சர், ‘அவர்மீது பிற குற்றச்சாட்டுகளும் உள்ளன.
அவையும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. தேவையானபோது அவர் குற்றப் புலனாய்வு துறைக்கு அழைக்கப்படுவார்’ என்றார்.
அதேவேளை, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நானோ உர வழக்கும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
‘ஒரே நேரத்தில் கையாள வேண்டிய வழக்குகள் மிகவும் அதிகம்.
தற்போது ஊஐனு அதிகாரிகளில் மூன்றில் இரண்டு பங்கு பேர் தினமும் நீதிமன்றங்களில் சாட்சியம் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்’ என அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) எதிர்க்கட்சியில் இருந்தபோது முன்வைத்த கோப்புகளும் இன்றைய விசாரணைகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், ‘அந்த வழக்குகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
காலப்போக்கில் பலர் கைது செய்யப்படுவார்கள்’ எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் காவல்துறையின் பணிகளில் தலையிடாது எனவும், ‘எங்கு புகார் வந்தாலும் காவல்துறை விசாரிக்கும். வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதால் காலம் பிடிக்கும், ஆனால் நீதியை நிலைநாட்ட உறுதியாக உள்ளோம்’ எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதி விக்கிரமசிங்க கைது தொடர்பாக அவர், ‘நீதிமன்றம் ஏழு மணிநேரத்துக்கும் மேலாக இரு தரப்பினரின் வாதங்களைக் கேட்டுப் பின் தீர்ப்பு வழங்கியது.
நீதிமன்றத்தின் அதிகாரத்தை கேள்வி கேட்பது பொருத்தமற்றது. வக்கீல்களின் கடமை தான் தங்கள் தரப்பை வலியுறுத்தி பிணை கோருவது.
நீதிமன்ற தீர்ப்புகளை கேள்வி கேட்கும் கலாசாரம் மாற வேண்டும்’ என்றார்.
சிலர் சிறைத் தண்டனையைத் தவிர்க்க மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது போன்ற முறைகளைப் பயன்படுத்துவதாகவும், ‘அவ்வாறு சட்டத்தை மீறுபவர்களை அரசு காப்பதில்லை.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை அனுபவிக்க வேண்டும். சிறைகள் ஏற்கனவே நிரம்பியுள்ளன, ஆனால் தண்டனைக்கு உரியவர்கள் தப்பிக்க முடியாது’ என்றும் அவர் வலியுறுத்தினார்.

