நீதி அமைச்சகம், 2000ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவுசெய்யப்பட்டு இதுவரை விசாரணைக்கு உட்படுத்தப்படாத 10,531 காணாமல் ஆக்கப்பட்டோரின் கோப்புகளை விசாரிப்பதற்காக, மூன்று பேர் கொண்ட 25 விசாரணைக் குழுக்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கான நிதியாக 375 மில்லியன் ரூபாவை அமைச்சரவை அங்கீகாரத்துக்காக கோரப்பட்டுள்ளது.
இந்த குழுக்கள், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் OMP கீழ் செயல்படவுள்ளன.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நாளை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை (29-08) டெம்பிள்ட்ரீஸ் மாளிகையில் OMP ஏற்பாடு செய்த நிகழ்வில் பங்கேற்ற நீதியமைச்சர் ஹர்ஷண நானாயக்காரா இந்த தகவலை வெளிப்படுத்தினார்.
அமைச்சர் கூறுகையில், ‘மூன்று பேர் கொண்ட 25 குழுக்களை அமைக்க 375 மில்லியன் ரூபாவை கோரி அமைச்சரவை ஆவணத்தை சமர்ப்பித்துள்ளேன்.
நிதி அமைச்சகம் தற்போது இதனை பரிசீலித்து வருகிறது.
ஜனாதிபதியும் இதற்கு ஒப்புதல் அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகள் நவம்பருக்குள் தொடங்கும் என்று நம்புகிறோம்’ என்றார்.
OMP இன் உத்தியோகத்தர் ஒருவர் விளக்குகையில், 2000க்குப் பிறகு நடந்த வழக்குகள் 2022 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் முன்னுரிமையுடன் விசாரிக்கப்பட்டுள்ளதால், இப்போது 2000க்கு முந்தைய வழக்குகள் மீது கவனம் செலுத்தப்படுவதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு விசாரணைக்கும் சுமார் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகும் என்பதைக் கணக்கிட்டு செலவின மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
35 ஆண்டுகளாக தனது கணவரை எதிர்நோக்கி காத்திருப்பதாக மரியா ஹெலெனா டயஸ் கூறியதோடு, ‘நியாயத்தை பெற எத்தனை OMP அமைப்புகள் உருவாக வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் மேலும், ‘இந்த பிரச்சனை எங்கள் ஆட்சி முடிவதற்கு முன்னரே தீர்க்கப்படும். அடுத்த அரசுக்கு இது தள்ளப்படக் கூடாது’ என்றார்.
ழுஆP நிறைவேற்று இயக்குநர் டாக்டர் ஜே. தாத்பரன் கூறுகையில், 2016இல் OMP நிறுவப்பட்டபோது மொத்தம் 39,417 வழக்குகள் மாற்றி வழங்கப்பட்டதாகவும், நகல்கள் நீக்கப்பட்ட பின் 2025 ஆகஸ்ட் மாதம் நிலவரப்படி 16,966 வழக்குகள் மீதமுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதில் 6,449 வழக்குகள் தொடக்க விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், OMP இன் ட்ரேசிங் யூனிட் இதுவரை 22 வழக்குகளைப் பின்தொடர்ந்து, அதில் 15 பேர் இலங்கையில் உயிருடன் இருப்பது, ஐந்து பேர் வெளிநாட்டில் வாழ்வது, இருவர் மரணமடைந்தது ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளன.
தற்போது OMP யில் 36 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அடுத்த ஆறு மாதங்களில் மேலும் 96 பேரை ஆட்சேர்ப்பு செய்யும் திட்டமுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடாக 115 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதில், 86 மில்லியன் ரூபா பயன்படுத்தப்பட்டதாக OMP ஆண்டு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

