ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 600 பேர் உயிரிழந்ததுடன், 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தாலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு (அமெரிக்க கிழக்கு நேரம் மாலை 3.30) ஜலாலாபாத் நகரத்திலிருந்து சுமார் 17 மைல் தூரத்தில், பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் ஏற்பட்டது.
ஆப்கான் சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஷரஃபத் சாமான் கூறுகையில், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி தொலைவான மலைப்பாங்கான இடமாக இருந்ததால் மனித உயிரிழப்புகள் மற்றும் உள்கட்டமைப்பில் ஏற்பட்ட சேதங்களை துல்லியமாக அறிய சில காலம் பிடிக்கும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கானோரைக் களமிறக்கி பெரிய அளவிலான மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மேலும் தெரிவித்ததாவது, முதல் நிலநடுக்கத்திற்குப் பின்னர் திங்கட்கிழமை முழுவதும் 4.5 முதல் 5.2 ரிக்டர் அளவிலான குறைந்தது ஐந்து அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
இத்தகைய பிந்தைய அதிர்வுகள் பல நாட்களுக்கு நீடிக்கக்கூடும், சில சமயங்களில் முதற்கட்ட நிலநடுக்கத்தை விட மோசமாகவும் இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் பல பிளவுக் கோடுகளின் மீது அமைந்திருப்பதால் நிலநடுக்கங்களுக்கு மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் நாடாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக கிழக்கு ஆப்கானிஸ்தானின் மலைப்பாங்கான நிலப்பரப்பு மண்சரிவுகளுக்கு ஆட்படக்கூடியது என்பதால் மீட்புப் பணிகளை முன்னெடுப்பது இன்னும் கடினமாகிறது.
இந்த முறை ஏற்பட்ட நிலநடுக்கம் 5 மைல் ஆழத்தில் ஏற்பட்டதால், அதின் அளவு மிதமாக இருந்தாலும் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
2022 ஆம் ஆண்டு கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 1,000 பேர் உயிரிழந்திருந்தனர்.
அந்த நிலநடுக்கமும் ஆழம் குறைவாக இருந்ததே பெரும் அழிவுக்குக் காரணமாகியது.
அதனைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டு, ஒரு வாரத்தில் மூன்று முறை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தை தாக்கின.
அவற்றில் சுமார் 1,500 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்தது.
திங்கட்கிழமை இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ஏற்கனவே நான்கு ஆண்டுகளாக தொடர்ச்சியான வறட்சியால் பாதிக்கப்பட்டு வரும், உலகின் மிகவும் ஏழை நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் சவாலாக உருவாகியுள்ளது. இவ்வாண்டில் மட்டும் 2.3 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆப்கானிகள் ஈரான் மற்றும் பாகிஸ்தானிலிருந்து திரும்பியுள்ளனர்.

