யுத்தத்தின்போது இராணுவத்தின் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளும் வீதிகளும் இனி மக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்தித் திட்டத்தை இன்று அவர் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றியபோது இதனை குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மேலும் கூறியதாவது:
‘பிரிக்கப்பட்டிருந்த எம்மை ஒன்றிணைக்கத் தேர்தல் தேவைப்பட்டது.
இப்போது அந்த ஒன்றிணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
எதிர்காலத்தில் எமது பிள்ளைகள் பிரிவின்றி ஒன்றுபட்ட நாட்டில் வாழ வேண்டும்.
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்ற பேதமின்றி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
குறிப்பாக வடக்குமக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளை கவனத்தில் கொண்டு, விவசாய நிலங்களை மக்களுக்காக வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது’ என்றார்.
அவர் மேலும் வலியுறுத்துகையில்:
‘யுத்தத்தினால் பெருமளவில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இனி ஒருபோதும் யுத்த ஆபத்து இல்லை. யுத்தம் நடைபெறும் என்ற எண்ணத்தில் இந்த காணிகளை வைத்திருக்கவில்லை.
எமது அரசாங்கம் இனி யுத்தம் நடைபெறாத நிலையை உறுதிசெய்ய செயற்படுகிறது.
சில முந்தைய அரசாங்கங்கள் யுத்தம் மீண்டும் நிகழலாம் என்ற எண்ணத்தில் காணிகளை வைத்திருந்தன.
ஆனால் நாம் மக்களின் காணிகளையும் வீதிகளையும் விரைவாக அவர்களிடம் திருப்பி வழங்குவோம்’ எனத் தெரிவித்தார்.
அதன்பின் அவர் வடக்குமக்களின் பிரதான வாழ்வாதாரமாக உள்ள மீனவ சமூகத்திற்கான வசதிகள் குறித்து பேசியபோது:
‘வடக்கில் மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்கவும், அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் வட மாகாண மீனவர்கள் மட்டுமன்றி, கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து வரும் மீன்பிடி படகுகளுக்கும் நீர், மின்சாரம், எரிபொருள், குளிர்சாதன சேமிப்பு, வலை தயாரிப்பு நிலையம், ஏல விற்பனை மண்டபம் மற்றும் தொடர்பாடல் பரிமாற்ற மையம் போன்ற வசதிகள் வழங்கப்படும்.
இதற்காக இவ்வருடம் 298 மில்லியன் ரூபா அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றார்.
மேலும், கடந்த கால அரசாங்கங்கள் போரை எதிர்பார்த்து பணியாற்றிய போதிலும், தற்போதைய அரசாங்கம் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக பாடுபடுவதாகவும், நாட்டைச் சூழ்ந்த கடல், தீவுகள் மற்றும் காணிகளை மக்களுக்காகப் பாதுகாக்கும் பொறுப்பில் உறுதியுடன் செயல்படுவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

