இலங்கையில் இனி போர் அச்சுறுத்தல் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அவர் நேற்று (01-09) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மைலிட்டி மீனவர் துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோது இதனை கூறினார்.
இந்தத் திட்டத்திற்காக இவ்வாண்டு பட்ஜெட்டில் ரூ.298 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
வட மக்களே கடந்த பொதுத் தேர்தலில் நாட்டை ஒருமுகப்படுத்தும் பணியில் முக்கிய பங்காற்றினார்கள் என்றும், அந்த ஒற்றுமை எதிர்காலத்திலும் வலுப்பெற வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
குழந்தைகள் இனி பிரிக்கப்படக் கூடாது என்றும், வடக்குஇதெற்கு,கிழக்கு என பிரிக்காமல், நாடு முழுவதையும் ஒருமுகப்படுத்தி பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் பாடுபடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக வட மக்களின் பொருளாதாரச் சவால்களை அரசு சிறப்பு கவனத்துடன் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
முந்தைய ஆட்சிகள் எப்போதும் போர் நிகழும் என்ற எதிர்பார்ப்புடன் செயல்பட்டன.
ஆனால் தற்போதைய ஆட்சி மீண்டும் எந்தவிதப் போரும் நடைபெறாத வகையில், அமைதி மற்றும் ஒற்றுமையை உருவாக்கும் நோக்கில் செயல்படுகிறது என்று ஜனாதிபதி கூறினார்.
போரின்போது பாதுகாப்புப் படைகளுக்குக் கையளிக்கப்பட்ட வடக்கிலுள்ள அனைத்து நிலங்களும், விடுவிக்கக் கூடியவை மக்களிடம் திருப்பி வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
நாட்டின் கடல், தீவுகள், நிலம் ஆகியவை மக்களுக்காகவே பாதுகாக்கப்படும்; எந்தவிதமான வெளிப்புறத் தலையீடும் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் அவர் உறுதியளித்தார்.
அத்துடன், யாழ்ப்பாண குடிவரவு – குடியகழ்வு துறையின் பிராந்திய அலுவலகத்தையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
இது யாழ்ப்பாண மக்களின் நீண்டகால தேவைகளில் ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் நிர்வாக சேவைகள் கொழும்புக்குள் மட்டுப்படுத்தப்படாமல் கிராமப்புற மக்களுக்கும் எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக அதிகாரப் பொறுப்புகள் பகிர்ந்து வழங்கப்படும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அரசின் முதன்மை முன்னுரிமைகளில் ஒன்றாக டிஜிட்டல் மாற்றம் இடம் பெற்றுள்ளதாகவும், வரும் 2026ஆம் ஆண்டுக்குள் மக்களுக்கு அனைத்து அரசாங்கப் பணப்பரிவர்த்தனைகளையும் ஆன்லைனில் நிறைவேற்றக்கூடிய வசதி கிடைக்கும் என்றும் அவர் அறிவித்தார்.

