ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு நேற்று (01-09) மன்னாருக்கு விஜயம் செய்து பொது அமைப்புக்களை சந்தித்தபோதும், மக்களின் குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் எந்தவித கவனமும் செலுத்தவில்லை என்று பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரன் குற்றம் சாட்டினார்.
இன்று செவ்வாய்க்கிழமை மன்னாரில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் தெரிவித்ததாவது, காற்றாலை மற்றும் கனிம மணல் தொடர்பான பிரச்சினைகளை முன்னிட்டு கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்தபோது, ஒரு மாதகாலம் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அதன் பின்னர், நிபுணர்கள் குழுவை மன்னாருக்கு அனுப்பி, சிவில் அமைப்புக்கள் மற்றும் மக்களுடன் ஆலோசித்து தீர்மானம் எடுக்க வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி மின்சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் துறைத்தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு நேற்று மாலை மாவட்டச் செயலகத்தில் பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடினர்.
இக்கலந்துரையாடலில், ஏற்கனவே நிறுவப்பட்ட 30 காற்றாலைகளால் எழுந்த பிரச்சினைகள் மற்றும் இனி அமைக்கப்படவுள்ள காற்றாலைகளின் விளைவுகள் குறித்து மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தியதாகவும், மன்னார் தீவில் இத்திட்டங்களை முற்றாக நிறுத்த வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை அவர்கள் புறக்கணித்ததாகவும் சிவகரன் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும், மக்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கை முறையையும் பாதிக்கும் வகையில் உள்ள இந்த இரு திட்டங்களையும் மன்னார் தீவிலிருந்து வெளியே மாற்ற வேண்டும் என்ற அடிப்படை கோரிக்கை நிபுணர் குழுவின் பார்வையில் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டார்.
இதனால், அவர்கள் தயாரிக்கும் அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி இறுதி முடிவெடுக்கவுள்ளார் என்பதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி காற்றாலை திட்டத்தை ஒரு மாதகாலம் இடைநிறுத்தியது கண்துடைப்பு நடவடிக்கையே என முன்னதாகவே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தேன்.
அதேபோல், நிபுணர் குழுவும் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல், வெறும் பிரச்சினைகள் பற்றியே விவாதித்தனர்.
இக்குழுவில் இடம்பெற்ற அதிகாரிகள் ஏற்கனவே பலமுறை மன்னாருக்கு வந்தவர்களே ஆகும்; எனவே அவர்களிடமிருந்து சாதகமான முடிவுகள் கிடைக்கப்போவதில்லை என்று அவர் கூறினார்.
மன்னார் மக்களின் ஒருமித்த கோரிக்கையாகிய காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வு திட்டங்கள் தீவிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசு செயல்படுமா அல்லது தனது நிறைவேற்று அதிகாரத்தையும் பெரும்பான்மை ஆதரவையும் பயன்படுத்தி திட்டங்களை முன்னெடுப்பதா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

