இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த குமார் ஜயதேவ கரன்னாகொடவின் ஆங்கில சுயசரிதை பிரித்தானிய சந்தையில் விற்பனை செய்ய தடைசெய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் தொடர்புடையவராக கருதப்பட்டதால், இந்த ஆண்டு மார்ச் மாதம் பிரித்தானிய அரசு அவர்மீது தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து, அவரது சுயசரிதையான “The Turning Point: The Naval Role in Sri Lanka’s War on LTTE Terrorism” என்ற நூலை Amazon UK தனது விற்பனைப் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.
சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் வெளியிட்ட எச்சரிக்கையில், தடைக்குட்பட்ட ஒருவருக்கு பதிப்புரிமை மற்றும் கொடுப்பனவு வழங்குவது பிரித்தானிய சட்டப்படி குற்றமாகும் என்றும், அதற்காக அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டது.
வசந்த கரன்னாகொட இலங்கை கடற்படைத் தளபதியாக இருந்த 2008–2009 காலகட்டத்தில், கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் அவர் முக்கிய சந்தேக நபராக குறிப்பிடப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்டவர்கள் திருகோணமலையில் உள்ள கன்சைட் நிலக்கீழ் வதை முகாம் மற்றும் கொழும்பு அமைந்திருந்த பிட்டு பம்புவ தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டதாகவும், இவை அனைத்தும் அப்போதைய தளபதியாக இருந்த கரன்னாகொடவின் கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவால் நடத்தப்பட்டதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், போர்க்களத்தில் காட்டிய துணிச்சலை அங்கீகரித்து இலங்கை அரசு கரன்னாகொடவுக்கு ‘அட்மிரல் ஒப் தி ப்ளீட்’ பட்டத்தையும் ரணசூர பதக்கத்தையும் வழங்கியுள்ளது.
மேலும் அவர் விஷிஸ்ட சேவா விபூஷணம், உத்தமசேவா பதக்கம், குடியரசு ஆயுதப் படைகள் நீண்டகால சேவை பதக்கம், ஜனாதிபதியின் பதவியேற்பு நினைவு பதக்கம், வடக்கு–கிழக்கு ஒப்பரேஷன் பதக்கம், பூர்ண பூமி பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றிருப்பதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

